10 ரூபாய் சர்ச்சை | கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் கடைகளுக்கு நிர்வாகம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மதுபானக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், "மதுக்கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கும் மேல் வசூலித்து விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், கூலிங் பீர் என ஒவ்வொரு விதமான மது பாட்டில்களுக்கும் கூடுதலாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுவதாக மது அருந்துபவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். மதுவிலக்கு துறைக்கு முத்துசாமி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு உத்தரவிடக் கூடாது என உத்தரவிட்டார். ஆனாலும் மதுபான விலையைவிட கூடுதலாக வசூலிப்பதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்ததால் தற்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரூ.10 கூடுதலாக வாங்குவது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களிடம் கேட்டபோது தங்கள் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்று கூறி, அவர்கள் அளித்த தகவல்கள்: “வாடகை ஒப்பந்தத்தை விட கூடுதல் வாடகை தர வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ, 1,000 வரை கொடுக்க வேண்டும். வாட்ச்மேனுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரமேனும் கொடுக்க வேண்டும். பெட்டி இறக்குவதற்கு கூலியாக பெட்டி 1-க்கு ரூ.5 மாமூல் ரூ.100 தர வேண்டும். அதில் கெடுபிடி செய்தால் ‘பாட்டில் டேமேஜ்’ கூடும்.

கடைகளுக்கு சரக்கு அனுப்புபவர் பில் போட மாமூல் ரூ.500 முதல் ரூ.5,000 வரை கொடுக்க வேண்டும். ஆடிட்டிங் செய்யும் ஆடிட்டர்களுக்கு ஒரு கடைக்கு மாதம் ரூ.1,200 கொடுக்க வேண்டும். கூடுதல் கலால் அலுவலருக்கு மாதம் ரூ.1,200, மாவட்ட கலால் அலுவலருக்கு மாதம் ரூ.700, டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு விற்பனையில் 3.5 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.

இதுதவிர காவல்துறையில் பகல் பீட்டுக்கு ரூ.300 மற்றும் குவாட்டர், இரவு பீட்டுக்கு ரூ.200 மற்றும் குவாட்டர்; இது இல்லாமல் அரசியல் கட்சிகள், கோயில் திருவிழா நன்கொடைகள் இருக்கின்றன. இந்தச் செலவையெல்லாம் ஈடுகட்டவே குடிமகன்களிடம் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குகிறோம். இப்படி வாங்காவிட்டால் மேற்கண்ட செலவினங்களை எங்களால் சமாளிக்கவே முடியாது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE