முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி: அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

13 மணி நேர சோதனைக்கு பிறகு, பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடிய விடிய நடந்த விசாரணைக்கு பிறகு, அதிகாலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடியை, பெங்களூருவில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். துணிச்சலுடன், சட்டரீதியாக விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் அறிவுரை வழங்கியிருந்தார்.

நேற்று மாலை இரண்டாவது நாளாக பொன்முடி விசாரணைக்கு ஆஜராகினார். இரவு 10 மணி அளவில் அவரிடம் விசாரணையை முடித்து அவரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

பின்னர் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடையரூ.41.90 கோடி நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அமைச்சர் பொன்முடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது அவர் அமலாக்கத்துறை விசாரணை குறித்து எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

அமைச்சர் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன், திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் நேற்று காலை சந்தித்து பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE