போலீஸார் என்றால் குற்றவாளிகளை தேடுபவர்கள்; பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வரலாற்றைப் பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் பழங்கால நாணயங்கள், பொருட்களை சேகரிக்கும் பணியோடு, பள்ளிகளில் அவற்றை காட்சிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் காவல் உதவி ஆய்வாளர் கேசவன்.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலுக்கு எதிரே திருக்காமீஸ்வரர் வீதியில் தற்போது வசித்து வருகிறார். 45 வயதாகும் இவர் புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை வரதராஜன், வில்லியனூரில் ஓட்டல் நடத்தியதால் அதில் கிடைக்கும் வித்தியாசமான நாணயங்களை சேகரிக்க தொடங்கினார். அதிலிருந்து தொடங்கிய ஆர்வம் தற்போது வீடு முழுக்க பரவிக் கிடக்கிறது.
தனது சேகரிப்பு அனுபவத்தை பற்றி கேசவன் நம்மிடம் தெரிவித்ததாவது: எனது தந்தை, காமராஜர், கிருபானந்த வாரியார், அண்ணாதுரை, எழுத்தாளர் அகிலன் உள்ளிட்டவர்களின் ஆட்டோகிராப் வாங்கி சேகரித்தார். அதுவே எனக்கு ஆர்வத்தை தூண்டியது. 5-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பழங்கால பொருட்களை சேகரிக்க தொடங்கினேன்.
தற்போது 174 நாடுகளின் நாணயங்கள், 131 நாடுகளின் ரூபாய் நோட்டுகள் (கரன்சிகள்), அரிக்கன்மேடு அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெற்ற 8-ம் நூற்றாண்டு நாணயங்கள், செங்கல், சிறிய அளவிலான புத்தர் சிலை, சங்குகள், பானைகள் போன்ற அதிசயத்தக்க பொருட்களும், புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டபோது புதுச்சேரிக்கென தனியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட அரியவகை பொருட்கள் என்னுடைய சேகரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
கி.மு 301-ல் பயன்படுத்திய ஈயக்காசு முத்திரை நாணயம், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் போது வெளியிடப்பட்ட அரளிப்பூ காசு, கோழிக்காசு மற்றும் விஜயநகரம், தரங்கம்பாடி, சதுரக்காசு, சாதவாகனா நாணயங்களும், 1487-ல் பயன்படுத்திய சமர கோலா காலான் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணக்கிடைக்காத நாணயங்களை பாதுகாத்து வைத்துள்ளேன்.
இந்தியாவை ஆட்சிசெய்த பிரிட்டீஷ்காரர்கள் வெளியிட்ட ஜார்ஜ், எட்வர்ட், விக்டோரியா மகாராணி ஆகியோர் படத்துடன் வெளியான நாணயங்கள் மற்றும் பணத்தாள்களையும் என்னிடம் நீங்கள் பார்க்கலாம். 80 நாடுகளின் ஸ்டாம்புகள், தபால் தலைகள், ஒருங்கிணைந்த ஜெர்மன் நட்டினுடைய கடைசி 5 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கரன்சிகள், முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதல்நாள்’ கவர்கள் 1970 முதல் 2000 வரை சேகரிப்பதையும் விட்டுவைக்கவில்லை.
அத்துடன் கேமராக்கள் மீது ஆர்வம் வந்தது. கடந்த 1956-க்கு முன்பு இருந்த 63 வகையான கேமராக்களை சேகரித்து பொக்கிஷம் போன்று பாதுகாக்கிறேன். தற்போதும் 35 கேமராக்கள் பயன்பாட்டில் இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைகிறார்கள்.
சோழர் காலத்தில் பழவேட்டரையர் பயன்படுத்திய வாள் உட்பட 6 வகையான வாள்கள், பழங்காலத்து ஸ்டவ், விளக்கு, பாக்கு வெட்டும் கருவி, இன்டீரியம், செப்பு, பித்தளை போன்றவைகளால் செய்யப்பட்ட 160 வகையான லோட்டா என்று அழைக்கப்படும் சிறிய வகை குவளை, பம்பை உடுக்கை, நாகலிங்கம் உள்ளிட்ட உருவம் பொறித்த உத்திராட்ச கொட்டைகளை வீட்டில் அடுக்கி வைத்துள்ளேன்.
1950-களில் பயன்படுத்திய மர்பி ரேடியோ, கிராமோபோன், 14-ம் நூற்றாண்டு மதுக்கோப்பைகள், 1880-ல் பயன்படுத்திய அடுப்பு, 50 ஆண்டுகளுக்கு முந்தைய மரக்கா, குழந்தைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மைகள் என கிடைப்பது எல்லாவற்றையும் ஆசை ஆசையாய் சேகரிக்க தொடங்கிவிட்டேன். தற்போது பலரும் இதை ஆசையாய் பார்க்கும்போதுதான் இதன் அருமை தெரிகிறது.
அதோடு யானை தந்தங்களால் செய்யப்பட்ட பழங்கால நகை பெட்டிகள், ஆயிரக்கணக்கான நூல்கள், தமிழ் மொழி, தெலுங்கு பிராமிய மொழிகளில் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், எடைக்கற்கள் என வீடு முழுக்க பழங்காலத்து பொருட்களை அடுக்கியுள்ளேன். இதுமட்டுமின்றி இந்திய அளவில் 90 சதவீத கோயில்களின் தலவரலாற்று புத்தகங்களையும் சேகரித்துள்ளேன்.
புதுச்சேரி காசியல் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து பல அரசுப் பள்ளிகளில் பழங்காலத்து வரலாற்றை மாணவர்களுக்கு பள்ளி பருவத்தில் இருந்தே ஊட்ட வேண்டும் என்பதற்காக பழங்கால பொருட்கள் கண்காட்சியையும் நடத்தி வருகிறேன். ஆராய்ச்சியிலும் ஆர்வம் இருப்பதால் பழங்கால பொருட்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதுகுறித்து அறிந்தவுடன் பணியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அந்த இடத்துக்கு நேரில் சென்றுவிடுவேன்.
உலகில் நாகரிகம் வேகமாக வளர்ந்தாலும் ஒவ்வொரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, வரலாறு மறைந்து வருகிறது. தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பலர் பழங்கால வரலாறு அறியாதவர்களாகவே இருக்கின்றனர். எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகளுக்கு சென்று கண்காட்சிகள் நடத்தி வருவதுதான் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்கிறார் மகிழ்வுடன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago