மதுரை | மாட்டுத்தாவணி தற்காலிக மீன் மார்க்கெட்டில் 30 கடைகள் அகற்றம் - வியாபாரிகள் போராட்டம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மீன் சந்தையில் 30 கடைகளை நேற்று மதுரை மாநகராட்சி அப்புறப்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீஸார் கைது செய்ததால் போலீஸாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த ‘கரோனா’ காலத்தில் கரிமேட்டில் செயல்பட்ட மீன் மார்க்கெட் மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மீன் சந்தையில் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையும் விற்பனை செய்தனர். அதன்பிறகு அங்கிருந்து மீன் மார்க்கெட்டை மாநகராட்சி பலமுறை மாற்ற முயன்றும் இடமாற்றம் செய்ய முடியவில்லை.

வியாபாரிகள் அமைச்சர்களை சந்தித்து அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இந்த மீன் மார்க்கெட்டால் மாட்டுத்தாவணி பகுதியில் சுகாதார சீர்கேடும், மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவு திரள்வதால் தினமும் நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவந்தன.

இந்நிலையில் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் சமீப காலமாக அனுமதி இல்லாத கடைகளும் அப்பகுதியில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அனுமதி இல்லாத 30க்கும் மேற்பட்ட கடைகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுடன் சென்று ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தினர். அதற்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படவே போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். அப்போது வியாபாரிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறுகையில், ‘‘உரிய வரி செலுத்திய நிலையிலும் மாநகராட்சி அதிகாரிகள் மேயருக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோதமாக எங்கள் கடைகளை அப்புறப்படுத்துகின்றனர்’’ என்றனர்.

மேயர் இந்திராணி விளக்கம்: இதுதொடர்பாக மேயர் இந்திராணி வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாட்டுத்தாவணியில் தற்காலிகமாக செயல்படும் மீன் மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக சுமார் 31 கடைகள் உரிய அனுமதி பெறாமல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டு மாதாந்திர வாடகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படும் விதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அனுமதி பெறாத கடைகளை உடனடியாக அகற்றம் செய்ய பல முறை கோரியும் இதுவரை அகற்றப்படாமல் இருந்ததால் மாநகராட்சி 31 கடைகளையும் அகற்றியுள்ளது. மேலும் மாநகராட்சியின் எல்லைக்குள் இதுபோன்ற அனுமதி பெறாத கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றம் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் அவதூறுகளை பரப்புகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE