மதுரையில் மீண்டும் மீன்கள் சிலை அமைக்க 3 இடங்கள் தேர்வு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரை ரயில் நிலையம் முகப்பிலிருந்து அகற்றப்பட்ட மீன்கள் சிலையை மீண்டும் அமைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் நினைவாக 15 அடி உயரம் மற்றும் 3 டன் எடையில் நீருற்றுடன் 3 மீன்களின் வெண்கல சிலை 1999-ல் அமைக்கப்பட்டது.

ரயில் நிலையம் பராமரிப்பு பணிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் சிலை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என அப்போது கூறப்பட்டது. ஆனால் பராமரிப்பு பணிகள் முடிந்தும் மீன்கள் சிலை மீண்டும் அமைக்கப்படவில்லை.

இதனால் அதே இடத்தில் மீண்டும் மீன்கள் சிலை அமைக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பேருந்து நிறுத்தம் காரணமாக அதே இடத்தில் மீண்டும் மீன்கள் சிலை அமைக்க வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை மாநகராட்சிக்குள் மீன்கள் சிலை அமைக்க வேறு இடங்களை தேர்வு செய்ய மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைமையில் மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், எம்பி, எம்எல்ஏக்கள் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தக்குழு மீன்கள் சிலை நிறுவ தகுதியான இடத்தை ஒரு மாதத்தில் தேர்வு செய்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் அமைத்த குழு மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், காவல் துணை ஆணையர் பிரதீப், மேயர் இந்திராணி, சு.வெங்கடேசன் எம்பி, எம்எல்ஏக்கள் செல்லூர் கே.ராஜூ, கோ.தளபதி, எம்.பூமிநாதன், வி.வி.ராஜன்செல்லப்பா, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திருமலைக்குமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மீன்கள் சிலை அமைக்க மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே டிபிகே சாலை சந்திப்பு, டிபிகே சாலை கோட்டை வளாகம், தமுக்கம் மைதானத்தின் பிரதான நுழைவுவாயில் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த 3 இடங்களில் எந்த இடம் தகுதியானது என்பதை மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையின் ஆலோசனை பெறவும் முடிவு செய்யப்பட்டது. இந்த 3 இடங்களையும் ஜூலை 21-ல் நேரில் கள ஆய்வு செய்யவும், அன்றே ஆட்சியர் அலுவலகத்தில் கூடி மீன்கள் சிலை அமையும் இடத்தை இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE