24 மணி நேரத்துக்குள் உதயநிதி வீட்டுக்கு கூட அமலாக்கத்துறை செல்லலாம் - ஹெச்.ராஜா பேட்டி

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: ‘‘24 மணி நேரத்துக்குள் உதயநிதி வீட்டுக்கு கூட அமலாக்கத்துறை செல்லலாம்’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே மேகேதாட்டு அணை கட்டுவோம் என குறிப்பிட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் மவுனமாக இருந்தார். தற்போது மேகேதாட்டு அணைக்கு பூமி பூஜை நடத்துகின்றனர். அங்கு சென்ற ஸ்டாலின், சித்தராமையா, சிவக்குமாருக்கு பாதபூஜை செய்கிறார்.

காவிரி விஷயத்தில் 60 ஆண்டுகளாக திமுக துரோகம் செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கருணாநிதி, ஸ்டாலினின் தமிழ் இன துரோகத்தை வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.

தக்காளி, வெங்காயம் விலை திடீரென உயரும், குறையும். அதை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி கைதாவார் என்று ஏற்கனவே நான் சொன்னேன். அடுத்து அமலாக்கத்துறை சோதனை திருச்சி அல்லது தூத்துக்குடி அல்லது மதுரையா கூட இருக்கலாம்.

தமிழகத்தை தூய்மைப்படுத்த மக்கள் மோடியின் பின்னால் வர வேண்டும். தமிழகம் தலைநிமிர, திமுக, திக நீக்கப்பட வேண்டும். சிறிய விஷயத்துக்கு கூட பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்சிஜென்சி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக பயப்படாது. நாங்கள் பட்டியலிட்டு தூக்க வேண்டியவர்களை தூக்கிவிடுவோம்.

பொன்முடி, அவரது மகனுடன் தொடர்பில் இருப்பதால் 24 மணி நேரத்தில் கூட உதயநிதி வீட்டில் கூட அமலாக்கத்துறை சோதனையிடலாம். காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என அழைக்க வேண்டாமென அமைச்சர் கூறுகிறார். இனி மேதகு திருடர்கள் என்று கூட கூறலாம்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE