‘பெண்ணின் உரிமையை நியாயப்படுத்தும் நடவடிக்கை துன்புறுத்தல் அல்ல’ - உயர் நீதிமன்றம் கருத்து

By கி.மகாராஜன் 


மதுரை: ‘பெண்ணின் உரிமையை நியாயப்படுத்தும் நடவடிக்கையை மனரீதியாக துன்புறுத்தலாக கருத முடியாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 1987-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தன்னை பிரிந்து சென்றது மற்றும் மனரீதியாக துன்புறுத்தல் காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரி செல்வராஜ் கரூர் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் 2007-ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடியானது.

இதை எதிர்த்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2010-ல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஏற்கப்பட்டு செல்வராஜூக்கு விவகாரத்து வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சந்திரா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், "கணவர் வீட்டை விட்டு வெளியேறி 2வது திருமணம் செய்துள்ளார். மனுதாரர் வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஆனால் விவகாரத்து மனுவில் தான் வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்வதை மறைத்துள்ளார். மனுதாரர் 2001-ல் பிரிந்து சென்றுள்ளார். ஆனால் 2007-ல் தான் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவி தன்ன மனரீதியாக துன்புறுத்தியதாக கணவர் கூறியுள்ளார். கணவர் உண்மையில் மனைவியின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே விவகாரத்து வழக்கு தொடர்ந்திருப்பார். மனைவி தனது உரிமையை நியாயப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது.

இருவரும் சொத்து பிரச்சினையால் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ நீதிமன்றம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, பிரிந்து சென்றது மற்றும் மனரீதியான துன்புறுத்தல் ஆகிய காரணங்களுக்காக மனுதாரருக்கு வழங்கப்பட்ட விவாகரத்து ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE