2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற வியூகங்கள் வகுக்கப்பட்டன: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதேபோல் இந்தியா முழுவதும் இதுபோல் ஒரு கூட்டணி அமைத்து, அதன் வெற்றிக்கான வியூகங்கள் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்ட்ததில் பங்கேற்றுவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவினுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கான நலன், இவையெல்லாம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

சர்வாதிகாரம், ஒற்றைத்தன்மை, எதேச்சதிகாரம், அதிகார குவியலில் சிக்கி இன்று இந்த நாடு சிதைந்து போய்க்கொண்டிருக்கிறது. எனவே, மத்தியில் உள்ள பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, வரும் 2024ம் ஆண்டை மையமாக வைத்து, மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதேபோல் இந்தியா முழுவதும் இதுபோல் ஒரு கூட்டணி அமைந்து அந்த வெற்றிக்கான வியூகங்கள் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கின்றன.

அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாக, மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த இந்த கூட்டங்களைப் பொருத்தவரை, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, இது இந்தியா முழுவதற்கும் மகிழ்ச்சியளிக்கும் என்ற நம்பிக்கையை நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒன்றிணைந்துள்ள இந்த கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE