மகளிர் உரிமைத் தொகை | ஜூலை 24 முதல் ஆக.4 வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்: சென்னை மாநகராட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் சென்னையில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆக.4ம் தேதி வரையிலும், இரண்டாம்கட்ட முகாம் ஆக.5ம் தேதி முதல் ஆக.16ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும். நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் பகுதிகளின் விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமுக்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறை உதவி தொலைபேசி எண். 044-25619208 ஆகும். மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணையோ தாங்கள் சம்மந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்