சதுரகிரியில் 20 மணி நேரத்துக்குப் பின் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ - பாதுகாப்பாக தரையிறங்கிய பக்தர்கள்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீ சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை எடுத்து மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் பாதுகாப்பாக தரை இறங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத அமாவாசை மற்றும் பிரதோஷ வழிபாட்டிற்காக ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது. நேற்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் பிற்பகலுக்கு மேல் பக்தர்கள் மலை இறங்கத் தொடங்கினர். அப்போது மாலை 6 மணிக்கு மேல் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை 5-வது பீட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த இரு மாதங்களாக மழை இல்லாததால் வனப்பகுதி வறண்டு காணப்பட்டதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தடை விதித்த வனத்துறையினர் கோயிலில் உள்ள மண்டபங்களில் அவர்களை தங்க வைத்தனர். நேற்று இரவு முதல் சுமார் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவில் சதுரகிரி கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி கொண்டு இருந்தது.

மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வனப்பகுதியில் காட்டுத்தீ எரிவது தெரிந்தது. சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் இன்று காலை மலைப் பாதையில் எறிந்த காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது. அதன்பின் பக்தர்கள் சிறிது சிறிதாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.

வனப்பகுதியில் காட்டுத் தீ தொடர்ந்து எறிந்து வருவதால், இன்று சதுரகிரி செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சதுரகிரி செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி சென்றனர். தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE