விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? - அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

By ப.முரளிதரன்

சென்னை: ஆவடியில் மையப் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ள போதிலும், அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்களிடையே போதிய வரவேற்பின்றி காணப்படுகிறது. ஆவடி மாநகராட்சியில் கடந்த 2010 ஜனவரி 12-ம் தேதி 144-வது உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆவடியைச் சுற்றியுள்ள பாக்கம், கசுவா, தண்டரை, தாமரைப்பாக்கம், கீழ்கொண்டையார், மேல்கொண்டையார், புலியூர், பம்மதுகுளம், கர்லபாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இதற்காக, இந்த உழவர் சந்தையில் 34 கடைகள் கட்டப்பட்டன. ஆனால், தற்போது 15 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. அதுவும் காலை நேரத்தில் மட்டும் ஒரு சில விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்கின்றனர். பகலில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த ஒரு சிலர் கடை வைக்கின்றனர். ஆவடி மார்க்கெட்டுக்கு மிக அருகில் இந்த உழவர் சந்தை இருந்தாலும் பொதுமக்கள் யாரும் இங்கு காய்கறிகளை வாங்க வருவதில்லை.

இதனால், உழவர் சந்தை பொலிவிழந்து காணப்படுகிறது. உழவர் சந்தையில் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், ஆவடி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் விவசாயிகளை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: உழவர் சந்தையில் நன்றாக விற்பனை சென்ற நிலையில், நாளடைவில் அரசியல்வாதிகள், வியாபாரிகள் இங்கு வந்து விற்பனை செய்வதற்கு மிரட்டல் விடுத்ததால் பல விவசாயிகள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். மேலும், இந்த உழவர் சந்தைக்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன.

ஒரு நுழைவு வாயில் ரயில்வே கேட் எதிர்புறம் அமைந்திருந்தது. ரயில் மூலம் வருபவர்களும், ஆவடி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும் அந்த நுழைவு வாயில் வழியாக உழவர் சந்தைக்கு வருவார்கள். தற்போது, அந்த நுழைவு வாயிலில் தனி நபர் ஒருவர் ஆவின் பாலகம் அமைத்துள்ளார்.

இதனால், பொதுமக்களின் பார்வையில் படும்படியாக இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு இங்கு உழவர் சந்தை இருப்பதே தெரியவில்லை. போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, உழவர் சந்தையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதற்காக சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதனக் கிடங்கு இங்கு உள்ளது. ஆனால், அது பயன்பாட்டில் இல்லை. இதனையும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக கட்டப்பட்ட உழவன் அங்காடியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, ஆவடி உழவர் சந்தையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து காத்திருந்து விற்பனை செய்ய தயாராக இருப்பதில்லை. இதனால், அவர்கள் மொத்த விற்பனையாளர்களிடம் விற்று விட்டு சென்று விடுகின்றனர். மேலும், ஆவடி பஜார் பகுதியில் வியாபாரிகள் ரூ.10-க்கு காய்கறிகளை கவரில் போட்டுவிற்கின்றனர்.

பொதுமக்களும் உழவர் சந்தைக்கு உள்ளே வந்து வாங்க நேரமில்லாமல், வெளியே வியாபாரிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், உழவர் சந்தைக்கு உள்ளே கடை வைத்துள்ளவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. உழவர் சந்தையில் குறைந்த விலையில், தரமான முறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

அதேபோல், உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகள் மட்டுமின்றி ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உழவன் அங்காடி இன்னும் ஒரு மாதத்துக்குள் திறக்கப்படும். மேலும், நேரு பஜார் பகுதியில் உழவர் சந்தைக்கு உள்ளே வருவதற்கு நுழைவு வாயில் வைக்க அனுமதி கேட்டுள்ளோம்.

அனுமதி கிடைத்தபின் அங்கு நுழைவு வாயில் அமைக்கப்படும். அதேபோல், காய்கறிகளை பதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதனக் கிடங்கை பராமரிக்கும் பொறுப்பு சிறகுகள் என்ற சுயஉதவிக் குழுவுக்கு விரைவில் வழங்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்