சென்னை: தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினரின் அமைச்சரின் சென்னை வீட்டில் இருந்து, கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.70 லட்சம் ரொக்கம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
» இவரா பிரதமர் வேட்பாளர்? - பெங்களூருவில் ஒட்டப்பட்ட நிதிஷ் குமார் எதிர்ப்பு போஸ்டர்களால் பரபரப்பு
» “அமலாக்கத் துறை சோதனையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்” - பொன்முடியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்
13 மணி நேர சோதனைக்கு பிறகு, திங்கள்கிழமை இரவு அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். நள்ளிரவை தாண்டியும் இந்த விசாரணை நீடித்தது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோயில் அவென்யூவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மூத்த மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி வசிக்கும் வீட்டுக்கு அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரி தலைமையில் 5 பேர்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் காலை 6.30 மணிக்கு வந்து, சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 கார்களில் சோதனை செய்து, அதில் இருந்து டைரி உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சரின் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணினியில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, ஏதேனும் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதா என, தடயவியல் நிபுணர் தேவேந்திரனை வரவழைத்து சோதனை செய்தனர்.
இந்தியன் வங்கி அதிகாரி மனோஜ் தலைமையிலான அதிகாரிகளை வரவழைத்து, பணப் பரிவர்த்தனை, நகைகள் தொடர்பாக மதிப்பீடு செய்தனர். கே.கே.நகரில் பொன்முடி தொடர்புடைய மருத்துவமனையிலும் சோதனை நடந்தது.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் திருப்பாணாழ்வார் தெருவில் உள்ள பொன்முடி வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அதிகாரிகள் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து, அமைச்சரின் உதவியாளர் செல்வம் மூலம் வீடு திறக்கப்பட்டு, ஒரு பெண் அதிகாரி உட்பட 7 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
கைப்பற்றியவை என்னென்ன? - வீட்டில் 2 இரும்பு பீரோக்கள் பூட்டப்பட்டிருந்தன. அமலாக்கத் துறையினரால் அதை திறக்க முடியவில்லை. வெளியில் இருந்து பூட்டு திறப்பவரை வரவழைத்து, மாற்று சாவிகளை கொண்டு பீரோவை திறந்து சோதனை செய்தனர்.
விக்கிரவாண்டியில் பொன்முடிக்கு தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 5 பேரும், விழுப்புரம் பூந்தோட்டம் சாலையில் உள்ள அமைச்சரின் இளைய மகன் அசோக் சிகாமணி நிர்வகிக்கும் ஏஜென்ஸி நிறுவனத்தில் 6 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சரின் சென்னை வீட்டில், கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.70 லட்சம் ரொக்கம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பொன்முடியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
13 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனைக்கு பிறகு, இரவு 8 மணிஅளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரது காரில் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்தது. அப்போது, மகன் அசோக் உடன் இருந்தார்.
சோதனை நடைபெறும் தகவல் அறிந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வர்த்தக அணி தலைவர் காசிமுத்து மாணிக்கம் உட்பட 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பொன்முடி வீடு முன்பு குவிந்தனர். விழுப்புரத்திலும் அமைச்சரின் வீடு, கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான நிர்வாகிகள் குவிந்தனர்.
அதிகாலை சம்பவங்கள்... சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் இரவு 9 மணிக்கு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
விசாரணை நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சரவணன், "அமைச்சர் பொன்முடியின் வயது 72. அவரின் வயதையும், உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் மனிதாபிமானம் இல்லாமல் விசாரணை நடத்துவதாக கூறி நடந்துகொண்டது அமலாக்கத் துறை. 72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல். விசாரணை அமைச்சர் பொன்முடிக்கு மனஉளைச்சல் மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையும் மீறி அமலாக்கத் துறை மனிதத்தன்மையற்று செயல்பட்டது. 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் விசாரணை செய்வோம் என்கிறது அமலாக்கத் துறை. விசாரணையை நாளை காலை நடத்தினால் என்ன? குடி மூழ்கிவிடுமா அல்லது ஆதாரங்கள் அழிந்துவிடுமா. இது அமலாக்கத் துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா என்று தெரியவில்லை.
அமலாக்கத் துறையின் கண்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு நடந்த திமுக அமைச்சர்களின் வழக்குகள் தெரியுமா? அதிமுக அமைச்சர்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பது அமலாக்கத் துறையின் கண்களுக்கு தெரியாதுபோல. இன்றைய விசாரணை முடிந்து அமைச்சர் வீடு திரும்பியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பப்பட்டுள்ளது.
கொள்கை ரீதியாகவும், அரசு நிர்வாக ரீதியாகவும் ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்ப்பதால்தான் அமைச்சர் பொன்முடியை குறி வைத்துள்ளார்கள். ஆளுநர் டெல்லிக்குச் சென்ற ஒரு வாரத்தில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அமலாக்கத் துறை கேட்க வேண்டியது ஒன்றுதான், 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் வந்து தேடினால் எந்த ஆவணங்கள் கிடைக்கும்.
2024 தேர்தலுக்காக விடுக்கப்பட்ட மிரட்டல்தான் இது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுகவுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல். இதற்கு முதல்வர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். எனினும் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதில் அளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் அறிவிப்பார்" என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்: பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசியில் பேசும்போது, அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அவரிடம் அறிவுரை கூறினார். மேலும், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மிக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என்று பொன்முடியிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago