எதிர்க்கட்சிகளின் கூட்டம் எரிச்சலை ஏற்படுத்தியதால் அமலாக்க துறையை மத்திய பாஜக அரசு ஏவுகிறது: முதல்வர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதால், அமலாக்கத் துறையை மத்திய பாஜக அரசு ஏவியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று பெங்களூரு சென்றனர். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல்வர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து, ஏற்கெனவே பிஹார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.

அதைத்தொடர்ந்து, இன்றும், நாளையும் (ஜூலை 17. 18) கர்நாடக மாநிலம், பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டம் பாஜகவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் அமலாக்கத் துறை ஏவுதல் நடவடிக்கை. வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர். அதைப் பற்றியெல்லாம் திமுக கவலைப்படவில்லை. தற்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில், அமலாக்கத் துறை மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.

தொடர்ந்து, 10 ஆண்டுகள் அதிமுகதான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அண்மையில்கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த 2 வழக்குகளில், அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே, இந்த வழக்கை சட்டரீதியாக அவர் நிச்சயம் சந்திப்பார்.

எது, எப்படி இருந்தாலும், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் நிச்சயமாக பதில் வழங்க மக்கள் தயாராக உள்ளனர். பிஹாரிலும், கர்நாடகாவிலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்ப இவர்கள் செய்யும் தந்திரம்தான் இது. இதை எல்லாம், எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக இதைப் பார்க்கிறீர்களா?

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக ஆளுநர் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத் துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்றுதான் நான் கருதுகிறேன்.

பிஹார் சென்றபோது செந்தில்பாலாஜி; இப்போது பெங்களூரு செல்லும்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

பெங்களூருவில் காவிரி விவகாரம் குறித்து பேசுவீர்களா?

காவிரி, மேகதாது பிரச்சினையைப் பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பணியை மாறாமல் கடைபிடிப்போம். இந்தக்கூட்டம், மத்தியில் உள்ள ஆட்சியை அப்புறப்படுத்த நடைபெறும் கூட்டம். காவிரி பிரச்சினை பற்றிய கூட்டம் அல்ல. இப்போது இந்தியாவுக்கே ஆபத்து வந்திருக்கிறது, அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர, வேறு அல்ல.இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

முதல்வரின் ட்விட்டர் பதிவு: இதற்கிடையே பெங்களூரு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளி யிட்ட ட்விட்டர் பதிவில், “கர்நாடகத்துக்கு வணக்கம். பாட்னாவுக்குப் பின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளான நாங்கள்அழகிய பெங்களூரு மாநகரில் ஜனநாயகம் காக்க ஒன்றிணைந்துள்ளோம். பாஜகவின் ஜனநாயகத்துக்குப் புறம்பான உத்திகளுக்கு எதிராகநாம் ஒரே அணியாக நிற்க வேண்டியது அவசியம். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பிற்போக்கு அரசியலை நிராகரித்துமக்கள் மிகவும் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டை முன்வைத்துள்ளனர்.

இதனை இந்திய அளவிலும் செய்து காட்டுவோம். நாம் அனைவரும் இணைந்து நின்று மக்களாட்சியைப் பாதுகாப்போம். நம் பெருமைமிகு நாட்டின் ஒளிமிகு எதிர்காலத்தை உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE