அனைத்து மாவட்டங்களிலும் மதுவால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம்: அமைச்சர் முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு/கோவை: ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 180 மில்லியைவிட குறைவான அளவில் மது விற்பனை செய்ய வேண்டும் என உடல் உழைப்பு தொழிலாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான், 90 மில்லி அளவில், டெட்ராபேக்கில் மது விற்பனை செய்யலாமா என ஆய்வு மட்டுமே செய்யப்பட்டது.

காலையில் 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், தவறான இடத்துக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் மாவட்டம்தோறும் அமைக்கப்படும் என்றார்.

இதேபோன்று கோவையில் பேசிய அவர், காலை நேரத்தில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என்று கூறினால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலை நேரத்தில் சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மது அருந்துவதை தவிர்த்து நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்கான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE