வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை: புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நேரடி சாட்சி ஏதும் இல்லாததால், குற்றச் செயலில் ஈடுபட்டவர் யாரென இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இதுவரை 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரி சேகரித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அண்மையில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, 4 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரி சேகரிக்க நேற்று உத்தரவிட்டார். மேலும், குழந்தைகள் நலக் குழுத் தலைவர், காவல் துறையிலிருந்து ஒருவர் ஆகியோர் சிறுவர்களின் பெற்றோர்களிடம் கலந்து ஆலோசனை செய்து அவர்களுக்கு உகந்த ஒரு நாளை முடிவு செய்து, அந்த நாளில் ரத்த மாதிரி சேகரிக்கவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE