நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான சர்க்கரையின் விலையை ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ரேஷன் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டதே இதற்கு காரணம் என்கிறது தமிழக அரசு. விலை உயர்வு சர்க்கரையோடு நின்றுவிடுமா, அல்லது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தமிழக அரசின் தற்போதைய நிதிநிலைமைதான் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. தமிழக வருவாய் பற்றாக்குறை ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது. தென் மாநிலங்களிலேயே இதுதான் அதிகம் என்று மத்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட மாநிலங்களின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.42,000 கோடி என கூறப்படுகிறது.
கடும் நிதிச்சுமையால் தள்ளாடும் தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களிடம் வசூலித்த வருங்கால வைப்பு நிதி ரூ.5,000 கோடியை அதற்கான கணக்குகளில் செலுத்தவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 6 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பயன்களையும் வழங்கவில்லை.
இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் கி.நடராசன் கூறியபோது, ‘‘போக்குவரத்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.18,000 கோடி வரை பாக்கி வைத்துள்ளது. இதனால், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. பணிமனை, அலுவலகங்களை வங்கியில் அடகு வைத்து கடன் பெற்று செலவு செய்ய வேண்டியுள்ளது’’ என்றார்.
பல துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலையில், 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பள உயர்வுக்குப் பிறகு நிதிச் சுமை இன்னும் அதிகரிக்கும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையை சேர்த்தால் கடன் சுமை, ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
செலவு ஒருபுறம் அதிகரிக்க, எதிர்பார்த்தபடி வருவாய் இலக்கும் எட்டப்படவில்லை. இதற்கு ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி முக்கிய காரணம். இதனால் முத்திரைத்தாள் விற்பனை, பதிவுக் கட்டணம் குறைந்து போனதாக தமிழக அரசு கூறுகிறது. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்து போனதாகவும் கூறுகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்டப் பங்களிப்பை குறைப்பதால் கூடுதல் நிதிச் சுமையை ஏற்கவேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வருவாய் மேலும் குறையக்கூடும். இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான வரி வசூல் கூடும் என்ற நம்பிக்கையில் தமிழக அரசு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமலாகியுள்ளதால் அதன்மூலம் கிடைக்கும் மாநிலத்தின் பங்கு அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் வருவாய் வரும் என்பதும் தமிழக அரசின் எண்ணம்.
இதுபற்றி ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியர் ராஜலட்சுமி கூறியபோது, ‘‘தமிழக அரசின் கடன் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதனாலேயே, சமூக திட்டங்களுக்கு செலவிடும் தொகையைக் குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதும், ரேஷனில் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படாமல் இருப்பதற்கும் இதுவேகாரணம்.
அம்மா உணவகம் உள்ளிட்ட சமூக திட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஜிஎஸ்டி வரி உரியமுறையில் வசூலாகி அதன் பயனை தமிழகம் அடைய சில காலம் ஆகலாம். ஆனால், அதற்குள், உடனடியான வரி வருவாய் ரூ.3,000 கோடி வரை குறைய வாய்ப்பு உள்ளது. வரி வருவாய் உடனடியாக உயர வாய்ப்பில்லை. அதுவரை அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்வியே’’ என்றார்.
இதன் பின்னணியில் அரசு துறை சார்ந்த சிலரிடம் பேசியபோது, ‘‘தமிழகத்தில் தற்போதுரூ.1 வருவாய் வரும் நிலையில், ரூ.2.50 அளவுக்கு கடன் அளவு உள்ளது. வருவாய் வேறுபாடு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கிறது. இதை குறைத்துக்கொள்ள வேண்டும் என மாநில திட்ட கமிஷனும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, வருவாயைக் கூட்ட வாய்ப்பு இல்லாத நிலையில் செலவுகளை குறைப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை’’ என்றனர்.
இத்தகைய நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:
சென்னை பல்கலை. பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம்: இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, தமிழக பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் போலவே, தமிழக பொருளாதாரத்திலும் சேவைத் துறையின் பங்கு அதிகம். இதனால் உலக நாடுகளைச் சார்ந்து இருப்பதால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால், தமிழகத்தின் உடனடி வரி வருவாய் குறைவது தவிர்க்க முடியாதது. இதுபோன்ற சூழலில், தமிழக நிதி இழப்பீட்டை சரிசெய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. தொழில் துறை, பொருளாதார வளர்ச்சியில் தமிழக அரசு கவனம் செலுத்தினால் பொருளாதார சரிவில் இருந்து மீள முடியும். வீண் செலவுகளை குறைத்து, வருவாயை பெருக்க வேண்டும்.
பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்: தமிழக அரசின் பட்ஜெட்டில் பெரும் தொகை அரசு ஊழியர் சம்பளம், பென்ஷன், மானியங்களுக்கு செலவிடப்படுகிறது. முக்கியமான செலவுகளை குறைக்க முடியாத சூழலில் மானியங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது.
மத்திய அரசைப் பின்தொடர்ந்து, தமிழக அரசும் மானியங்களை குறைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.
நிதி ஆலோசகர் எம்.சேகர்: நாட்டில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் நீண்ட காலமாக இருந்தது.
ஆந்திரா போன்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பில் வேகமாக முன்னேறிச் செல்கின்றன. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குகின்றன. எனவே, உற்பத்தி துறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு வசதிகளை செய்துதர வேண்டும். தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரித்தால் அரசின் வருவாய் பெருகுவதுடன், தனிநபர் வருமானமும் உயரும். சமூக திட்டங்களில் முதலீடு செய்வதைவிட, தொழில்துறையில் அதிக முதலீடு செய்வது அவசியம்.
பொருளாதார நிபுணர் கவுரி ராமச்சந்திரன்: தமிழகத்தில் அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பதால் தொழில்முனைவோர் வரத் தயங்குகின்றனர்.
இதையடுத்து 11 துறைகள் சார்ந்த அனுமதியை ஒன்றாக ஒற்றைச் சாளர முறையில் வழங்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற அவசர, அவசிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்த நிதியாண்டு இறுதிக்குள் பொருளாதார நெருக்கடி தமிழகத்தை மூழ்கடித்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர். இனியாவது விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago