யாரோ ஒருவர் ரசிப்பதற்காக அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது - கார்த்தி சிதம்பரம் கருத்து

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: ‘‘யாரோ ஒருவர் ரசிப்பதற்காக அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது’’ என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை தேவையில்லாத ஒன்று. சோதனை, கைது என்பது கண்துடைப்புதான். அமலாக்கத் துறை சம்மன் மூலமாகவே விசாரணை நடத்தலாம். யாரோ ஒருவர் ரசிப்பதற்காக தான் சோதனை நடத்துகின்றனர்.
எதிர்க்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது.

இதன்மூலம் இந்தி, இந்துத்துவாவை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துகின்றனர். தமிழகத்தில் ஆளுநர், அமலாக்கத் துறை செயல்பாடு திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது எளிதானது அல்ல. சில மாநிலங்களில் சிக்கல் இருக்கும். அது பேசி, பேசி தான் தீர்க்கப்படும். தேர்தலையொட்டி காங்கிரஸை மையப்படுத்தியே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக, காங்., கூட்டணி வெற்றி பெறும். தமிழக மக்கள் இந்து, இந்துத்துவா விரும்புவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE