அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் - புழல் சிறைக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு திங்கள்கிழமை 108 ஆம்புலன்ஸ் மூலமாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மருத்துவமனையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற எஸ்.அல்லி, அவரை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிந்து கடந்த ஜூன் 28-ம் காணொலி வழியாக ஆஜரானார். இதைத் தொடர்ந்து, அவருடைய நீதிமன்ற காவலை, ஜூலை 26-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற நீதீபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக, 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.

புழல் சிறைக்கு மாற்றம்: இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சரியானதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காவேரி மருத்துவமனைக்கு வந்த சிறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து புழல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை 4.40 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை 108 ஆம்புலன்ஸ் (வண்டி எண் TN 20 G 3523) மூலமாக காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், புழல் 2 ஆவது சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நகர்வுகளில் அமலாக்கத் துறையின் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்