அமலாக்கத் துறை சோதனை | அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கின் முழு பின்புலம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் இந்தச் சோதனை நடந்து வருகிறது.

இந்தச் சூழலில், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து கடந்த ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டதன் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

செம்மண் குவாரிக்கு அனுமதி: கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இந்த செம்மண் அதிகமாக கிடைக்கிறது. விவசாய பயன்பாடுகள் மற்றும் தோட்டங்களைச் செப்பணிட இந்த செம்மண் அதிகளவில் வாங்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கவுதம சிகாமணி, அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. கவுதம சிகாமணிக்கு செம்மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கியபோதே, அவருடன் சேர்ந்து, அவருடைய உறவினர்களான ராஜ மகேந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அனுமதி பெற்றுள்ளனர்.

2012ல் வழக்கு: இதைத்தொடர்ந்து, ஆட்சி மாற்றத்துக்குப் பின், அதிமுக ஆட்சிக்கு வந்தது. செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, கவுதம சிகாமணி எம்.பி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீதான கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி செம்மண் குவாரியில் மணல் அள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு: இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து கீழமை நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டது. அப்போது, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில், வழக்கை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கின் விசாரணையை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரத்தில், விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு தள்ளுபடி: இந்த வழக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செம்மண் குவாரியில் மணல் அள்ள அளிக்கப்பட்டஅனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். | அதன் விவரம் > ''எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி'' - அமலாக்கத்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்