அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை சோதனை தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ஒன்றிய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை சட்ட விதிகள், விசாரணை முறைகள் என அனைத்து வழிகளிலும் அத்துமீறி, எதிர்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் சோதனை என்ற பெயரில் கடுமையாக நெருக்கடியும், நிர்பந்தமும் கொடுத்ததன் காரணமாக அவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு அரசின் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் வி.செந்தில் பாலாஜியை அரசியல் அமைப்புச் சட்டம் முதலமைச்சருக்கு வழங்கியுள்ள விருப்புரிமை அதிகாரத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு அமைச்சர் பொறுப்பிலிருந்து வி.செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக அறிவித்தார். பின்னர் உடனடியாக அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த கேலிக் கூத்து செயலால் பாஜகவின் சாயம் வெளுத்து போனது.

தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை சோதனை தாக்குதல் நடத்தி வருகிறது. முந்தைய ஆட்சியால் சொத்து குவிப்பு மற்றும் நில அபகரிப்பு குற்றம்சாட்டப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர் பொன்முடியும் அவரது குடும்பத்தினரும் அண்மையில் தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க அவர்கள் ஒரு போதும் தயக்கம் காட்டியதில்லை. தப்பித்துக் கொள்ள குறுக்கு வழி தேடியதும் இல்லை. இந்த நிலையில் அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டையும் எதிர்கொண்டு முறியடிப்பார்கள் என்பது உறுதியாகும்.

ஆனால், அமலாக்கத்துறையின் தலைவர் பொறுப்பில் மூன்றாவது முறையாக பதவி நீடிப்புப் பெற்று, பாஜகவின் அரசியல் முகவராக செயல்பட்டு வரும் தலைவரின் தகுதியை நாடு நன்கு அறிந்துள்ளது. ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜகவை ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இன்றும், நாளையும் (17, 18, ஜூலை 2023) பெங்களூருவில் கூடும் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அமலாக்கத்துறையை பாஜக ஒன்றிய அரசு பயன்படுத்தி இருக்கும் மலிவான செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE