ஆடி அமாவாசையை முன்னிட்டு நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்ய திரண்ட மக்கள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளிட்ட நதிக்கரை தலங்களில் மக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலமாகும். அதேபோல, காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி, இருமத்தூர் ஆகியவை தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலங்களாகும். இந்த தலங்களிலும் தொப்பையாறு அணை, பஞ்சபள்ளி அணை, நாகாவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் சித்திரை 1, ஆடி 1, ஆடி 18, ஆடி அமாவாசை, காணும் பொங்கல் தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பொதுமக்கள் நீராடவும், சடங்குகள் செய்யவும் திரள்வது வழக்கம்.

அந்த வகையில் ஆடி மாத முதல் தேதியான இன்று (ஜூலை 17) தருமபுரி மாவட்ட நதிக்கரை தலங்கள் மற்றும் நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் நீராடவும் வழிபடவும் திரளான மக்கள் வருகை தந்தனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் உயிரிழந்த முன்னோர்களுக்கு நதிக்கரையில் தர்ப்பண சடங்கு செய்திடவும் ஏராளமானவர்கள் நதிக்கரை தலங்களில் திரண்டனர்.

இவ்வாறு திரண்ட மக்கள் நீர் நிலைகளில் நீராடி, கரையில் பூஜைகள் செய்து நீர்நிலைகளையும் விருப்ப தெய்வங்களையும் வழிபட்டு ஊர் திரும்பினர். ஆடி மாத பிறப்பையொட்டி நீர்நிலை தலங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையை ஒட்டி தருமபுரி மாவட்ட கோயில்கள் அனைத்திலும் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE