அன்றாடம் அதிகரிக்கும் தக்காளி விலை: மதிப்புக்கூட்டு உணவுப்பொருள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்குமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தங்கம் போல் தக்காளி விலை அன்றாடம் உயர்ந்து வருவதால் மதிப்புக்கூட்டு உணவுப்பொருள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தக்காளி ரசம், சம்பார் முதல் அன்றாட அனைத்து சமையலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறி பழமாகும். இந்தியாவில், தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்தில் தக்காளி பரவலாகப் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிகளவு தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.

தக்காளி சாகுபடியின் பெரிய பிரச்சினையே எதிர்பாராத மழையில் அழுகிவிடுவதுதான். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் தக்காளி முழுவதும் அழுகிவிட்டது. அதனால், ஜூன், ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை பெய்து மீண்டும் தக்காளி விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் பெரியளவில் பயிரிடவில்லை.

சாகுபடி பரப்பு குறைந்ததால் தேவைக்கு தகுந்தவாறு தக்காளி சந்தைகளுக்கு வரவில்லை. இதுதான் தற்போது விலையேற்றத்துக்குக் காரணம். வெங்காயம், உருளைக்கிழங்கு போல் தக்காளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது. வைத்திருந்து விற்பனையும் செய்ய முடியாது. அதனால், விவசாயிகள் தக்காளியை வறட்சி, மிதமான மழை பெய்யும் இடங்களில் மட்டுமே அதிகமாக பயிரிடுவார்கள். ஆனால், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் விவசாயிகள் ஆண்டு முழுவதுமே தக்காளியை சாகுபடி செய்கிறார்கள். அப்படி அவர்கள் சாகுபடி செய்வதால் இரண்டு சீசனில் தக்காளி விலை வீழ்ச்சியடையும். இந்த நஷ்டத்தை, விவசாயிகள் அடுத்தடுத்த முறைகளில் ஈடுகட்டிவிடுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தக்காளி பதப்படுத்தும் சந்தையும், மதிப்புகூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இன்னும் அமைக்கப்படவில்லை.

தக்காளி உற்பத்தியில் வழிகாட்ட வேண்டிய தோட்டக்கலைத்துறை, தக்காளி சாகுபடி புள்ளி விவரங்கள் கூட தெரிவதில்லை. சாகுபடியையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை. மேலும், கிலோ ரூ.2 முதல் ரூ.5 வரை விற்று விவசாயிகள் நஷ்டப்படும்போது அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

அதனாலேயே, தக்காளி ஆண்டு முழுவதும் பயரிட விவசாயிகள் தயங்குகிறார்கள். தற்போது இந்திய உணவு வகைகளில் தக்காளியில் இருந்து சாஸ், ஜெல்லி, தக்காளி கெட்ச்அப், தக்காளி ஜெலட், சிப்ஸ், சாண்ட்விச், தக்காளி ஊறுகாய், தக்காளி சட்டினி, தக்காளி கூழ் போன்றவை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல் தக்காளியை பதப்படுத்தும் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் வந்துள்ளன. அதனால், இந்த மதிப்புக்கூட்டு உணவுப்பொருட்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்கான தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ அரசு நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு தக்காளி நஷ்டம் ஏற்படுவதை தடுக்கலாம். விலையயும் ஏற்ற இறக்கமில்லாமல் சீராக வைத்திருக்கலாம்.

மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சின்ன மாயன் கூறுகையில், ''தக்காளி இன்று ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கிறது. தங்கம்போல் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் விலை கூடுதலாக விற்க வாய்ப்புள்ளது. அரசு மாவட்டத்துக்கு 5 மதிப்புக்கூட்டு உணவுப்பொருள் தொழிற்சாலைகள் அமைத்தால், விவசாயிகளுக்கு ஆதாரவிலை கிடைக்கும். விலை குறையும்போது தக்காளியை மதிப்புக்கூட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிடலாம். மற்ற மாநிலங்களில் விலை குறைந்தால் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். அதுபோன்ற தொழிற்சாலைகள், தமிழகத்தில் இல்லை. அதனால், விலை குறையும்போது சாலைகளில் தக்காளியை விவசாயிகள் கொட்டும் அவலம் ஏற்படுகிறது,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE