65,034 பொறியியல்; 83,223 கலை அறிவியல் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 65,034 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 83,223 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “சத்தியதேவ்” நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை (Sathyadev Law Academy) தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார்.

இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. அப்படிப்பட்ட வழக்கறிஞர் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “வழக்கறிஞர் சட்டம்” 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னரே வழக்கறிஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு சமூக நீதி ஏற்பட்ட பின்னரே, பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் இத்தொழிலுக்கு வரத்தொடங்கினர். அதிக அளவிலான சட்டக்கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகும், சட்டப்படிப்பு சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சவாலாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ”சத்தியதேவ் லா அகாடமி”, அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள்/சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம். பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவின் “2D எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது.

இந்த “சத்தியதேவ் லா அகாடமி”-யை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் பேசியது: "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவித்து, அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “நான் முதல்வன்” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 463 பொறியியல் கல்லூரிகளில் 4,72,972 மாணவர்களும், 861 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,51,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் ஆண்டு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு- Simens, Dassault, Microsoft, IBM, Cisco Autodesk, L&T, TCS, Infosys, NSE போன்ற நிறுவனங்கள் மூலமாக AR/VR, Artificial Intelligence, Machine Learning, Full Stack, Data Analytics, Electric Vehicle Design, Cyber Security, Mutual Funds, Capital Markets, Fintech, Block Chain, Digital Marketing மேலும் இது போன்ற 70-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு நிறுவனங்கள் மூலமாக, திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 65,034 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 83,223 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். எனவே, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க “சத்தியதேவ் லா அகாடமி” நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர்சுதன், அகாடமியின் இயக்குநர் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், நடிகர் சூர்யா, 2D நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE