பேனா நினைவுச் சின்னத்தை சொந்த செலவில் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சொந்த செலவில் அறிவாலயத்தில் பேனா நினைவுச் சின்னம் வைத்துக் கொள்வதில், அதிமுகவுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "38 கோடி ரூபாய் என்று நினைக்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட்டது. மறுபடியும் 81 கோடி ரூபாயை கடலில் கொட்ட வேண்டுமா?

அந்த தொகையை எத்தனையோ வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம். சென்னையின் வளர்ச்சிப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம். வடசென்னை பகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம். தமிழகத்தில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டுக்கு அந்த 81 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யலாம்.

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் நல்லதொரு, நியாயமான தீர்ப்பை மீனவர்களின் நலன்கருதி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, அந்த பேனா நினைவுச் சின்னத்தை உங்களுடைய சொந்தச் செலவில் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது. அண்ணா அறிவாலயம்கூட, அண்ணா சாலைதானே, அனைவரும் செல்லும் வழியில் அதனைப் பார்த்து செல்வார்கள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையொட்டி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டன. சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பின.

இந்நிலையில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையானது கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் குழு வங்கக்கடலில் மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற சுற்று சூழல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி சில நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE