அரசுப் பணி தேர்வில் அரசியல் தலையீடு கிடையாது: முதல்வர் ரங்கசாமி பேச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 252 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: ''புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற எண்ணம் இருந்தது. ஏனென்றால், பல ஆண்டுகளாக அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. எங்களுடைய அரசு பொறுப்பேற்ற பிறகு படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, எல்லா துறைகளிலும் பணி இடங்களை நிரப்பி வருகிறது. முதலில் காவல்துறையில்தான் இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 500 பேருக்கு பணி கொடுக்க உள்ளோம். இதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது. அதிகமாக படித்தவர்கள் காவலராகி இருக்கிறார்கள். அதிகமாக படித்துவிட்டு காவலராகி விட்டோம் என்ற எண்ணம் வரக்கூடாது. இப்பணியை செம்மையாக மேற்கொள்ள வேண்டும். அடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் காலியாக உள்ள இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட 456 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அரசு பணி மட்டுமல்லாமல் பிற தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கும் நாம் நண்பனாக இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் பணியையும் செய்ய வேண்டும். போதை பழக்கத்துக்கு நிறைய பேர் அடிமையாகி உள்ளனர். அவர்களை எந்தநிலையிலும் விட்டுவிடக்கூடாது. சந்தேகம் உள்ளவர்களைப் பிடித்து விசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும்.

புதிய காவலர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் உங்களது பணி இருக்க வேண்டும். காவலர்கள் நீச்சல் பயிற்சி பெற நீச்சல் குளம் கேட்டுள்ளார்கள். நீச்சல் குளம் கட்ட கோரிமேட்டில் இடம் உள்ளது. இதற்கான நிதி காவல்துறைக்கு ஒதுக்கி தரப்படும். காவல்துறைக்கு கூடுதல் நிதியை உள்துறை அமைச்சர் கேட்டுள்ளார்.

இதற்கேற்றவாறு நிதி ஒதுக்கி தரப்படும். அந்த நிதி காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் செலவிடப்படும். என்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, புதுச்சேரி மாநிலம் பல்வேறு வகையில் முன்னேற வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். படித்த இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற அடிப்படையில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதில் காவல்துறையில் கூடுதலாக 500 ஊர்காவல் படை வீரர்கள், 60 சப்-இன்ஸ்பெக்டர்கள், 200 கடலோர காவல் பாதுகாப்பு படையினர், 12 ரேடியோ டெக்னீஷியன் பணியிடங்கள் அடுத்து வரும் காலங்களில் நிரப்பப்படும். காவலர் நியமனத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை. தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட வேண்டும். முதல்வர் ரங்கசாமி தலைமையில் வெளிப்படையான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

நல்லதொரு முன்னேற்ற பாதையில் புதுச்சேரி முன்னோக்கி செல்கிறது. பிரதமரின் பெஸ்ட் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. பிரதமரின் அன்பை பெற்றுள்ள மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. சமீபத்தில் கூட புதுச்சேரி வந்த நிதி அமைச்சர் 98 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக முதல்வரை பாராட்டினார். மேலும், மாநிலத்துக்கு தேவையான நிதியை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.'' இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அனிபால் கென்னடி, டிஜிபி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE