கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் - தரவுகள் அடிப்படையில் பயனாளிகளின் தகுதிகள் நிர்ணயம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு அமல்படுத்த உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுகள் செய்து, தரவுகள் அடிப்படையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. எனினும், திமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே திட்டம் தொடங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. தரவுகள் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்ததே தாமதத்துக்குக் காரணம்.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், ஒரு கோடிமகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்க, ரூ.7 ஆயிரம்கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செப். 15-ம் தேதி திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிப்பும் வெளியானது. இந்த திட்டத்தில் சிறு பிசகு ஏற்பட்டாலும், அரசின் மீதான மக்கள் நம்பிக்கை சிதைந்துவிடும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் முழு கவனத்துடன் இந்த திட்டத்தைக் கண்காணித்து வருகிறார்.

திட்டத்தின் பயனாளிகள், அவர்களுக்கான தகுதிகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தகுதியானவர்களைக் கண்டறிய ஒரு கட்டமைப்பையும் அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக சேகரிக்கப்பட்ட தரவுகள், அடுத்தடுத்த அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவுக்குப் பயன்தரும். திட்டப் பயனாளி 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 2, 3 பேர் இருந்தால், அவர்களே ஒரு பயனாளியை தேர்வு செய்யலாம். அதேபோல, திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகளை குடும்ப தலைவியாகக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல, ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டுவருமானம், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய்அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என பல்வேறு அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வைத்துள்ளோர், முதியோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் இதில் பயனடையமுடியாது.

ஏற்கெனவே தமிழக நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், தரவுகள் அடிப்படையிலான நிர்வாகம் என்று வலியுறுத்தி வந்தார். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளையும் அரசு தொகுத்துள்ளது. இதற்காக, அண்மையில் எந்த ஒரு மாநிலமும் மேற்கொள்ளாத வகையில், வருமான வரித் துறையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், ஆதார் அடிப்படையிலான தகவல்களையும் அரசால் பெற இயலும். இவையே பயனாளிகள் தேர்வில் முக்கிய விஷயங்களாக உள்ளன.

ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாடு என நிர்ணயித்தது, வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை எடைபோடத்தான். இந்த தரவுகள் மின்வாரியத்திடம் உள்ளன. அதேபோல, தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 35 லட்சம் என்று தரவுகள் தெரிவிக்கும் நிலையில்,அவர்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ளவர்களில் தகுதியானவர்களைக் கண்டறிவது எளிதானது.இதுதவிர, பல்வேறு தரவுகளின் அடிப்படையில், ஏழை மக்கள் யார் என்பதையும் அரசு தெளிவாகக் கண்டறிந்துள்ளது.

இவ்வாறு, வருமான வரி செலுத்துவோர், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஓய்வூதியம் பெறுவோர் என பலரது வருவாய், வசதிகள் குறித்த தரவுகள் அரசிடம் உள்ளதால், தகுதியானவர்களைக் கண்டறிவது எளிதானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேல் முறையீடு வசதி: இந்த திட்டத்தில் தகுதியில்லாதவர்கள் யாரும் பயனடையக் கூடாது என்பதில் அரசுகவனமாக உள்ளது. அதற்காகத்தான், பெறப்படும் விண்ணப்பங்களை, அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, பயனாளிகள் முடிவுசெய்யப்படுகின்றனர். மேலும், சிலர் அளிக்கும் தகவல்கள், தரவுகளுடன் ஒத்துப்போகாமல் இருக்கும்பட்சத்தில், கள ஆய்வும் நடத்தப்படுகிறது. அதேநேரத்தில், கள ஆய்வு அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் தவறான தகவலைப் பதிவு செய்தால், மேல்முறையீடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இ-சேவை மையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும்போது உடனடியாக அடுத்தகட்ட ஆய்வு செய்யப்பட்டு, உண்மையாகவே தகுதியானவர் என்றால், அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

இதுதவிர, தகுதியான குடும்பமாக இருந்தும், அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கஇயலாத நிலை உருவானால், வேறு திட்டங்களின் மூலம் அக்குடும்பங்களைக் காப்பாற்றும் திட்டம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், அங்கெல்லாம் தகுதியான பயனாளிகளை தரவுகள் மூலம் கண்டறிந்து, உதவித்தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. தகுதியான பயனாளிகளை உரிய அளவுகோல்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் கண்டறிந்து வழங்குவது, மாநிலத்தின் மீதான மதிப்பீடுகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கோடிக்கும் மேல்...: தமிழகத்தில் 2022-23-ம் ஆண்டு நிலவரப்படி 2.43 கோடி வீட்டு மின்இணைப்புகள் உள்ளன. இவற்றில் ஒராண்டில் 3,600 யூனிட்களுக்கு மேல்மின்சாரப் பயன்பாடு உள்ள இணைப்புகள் 9.93 லட்சம். அதாவது, மொத்தஇணைப்புகளில் 4.89 சதவீதம் மட்டுமே. மீதமுள்ளவர்கள் 3,600 யூனிட்களுக்கு கீழ் மின் பயன்பாடு கொண்டவர்கள். இதர நிபந்தனைகளின் கீழ் வருவோர் தவிர்த்து, இவர்களில் ஒரு கோடி குடும்பத்தைக் கண்டறிவது மிகவும் சுலபம். எனவே, ஒரு கோடிக்கும் அதிகமாகவே மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் எண்ணிக்கை இருக்கும் என்று அரசு கணித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்