மதுரையில் கலைஞர் நூலகத்தை திறந்துவைக்க வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநகரில் முழுமை பெறாமலும், அறிவிப்போடும் நிற்கும் திட்டங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் ஏவி பாலம் வரை மேம்பாலம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் பல்வேறு மாற்றங்களையும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையை அடைந்துள்ளது. ஆனால், பாலம் இரு வழிப்பாதையாக அமையாமல் ஒரு வழிப்பாதையாக பல்வேறு குறைபாடுகளோடு அமைவதோடு தொடக்கத்தில் திட்டமிட்ட பாலத்தின் நீளமும், நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பாலம் கோரிப்பாளையத்தின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க எந்த வகையிலும் உதவாது.
மேலும், அரசு மருத்துவமனை வழியாக இந்தப் பாலத்தில் இருந்து பனகல் சாலைக்கு இணைப்புப் பாலம் அமைக்கப்படவில்லை. இப்படி பல்வேறு குழப்பங்களைக் கொண்டுள்ள இந்தப் பாலக் கட்டுமானப்பணி தற்போது வரை தொடங்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் கோரிப்பாளையத்தை முடக்கிப் போட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிப்பாளையம் சந்திப்புப் பகுதியை கடந்து செல்ல முடியவில்லை.
அமைச்சர்களுக்கு தெரிவதில்லை? - அவசரத்துக்கு நோயாளிகளை ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனைப் பணிக்கு இந்தப் போக்குவரத்து நெரிசலைத் தாண்டிச் செல்வதால் அவர்கள் எரிச்சலும், சோர்வும் அடைகின்றனர். உள்ளூர் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் வரும்போது மட்டும் போலீஸார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி அவர்களை நெரிசலில் சிக்காமல் அனுப்பிவிடுவதால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கோரிப்பாளையத்தில் மக்கள் அன்றாடம் படும் வேதனை தெரிவதில்லை.
நெல்பேட்டை, தெற்குவாசல் வழியாக விமான நிலையத்துக்கு மேம்பாலமும், யானைக்கல், சிம்மக்கல் வழியாக பெரியார் பேருந்து நிலையத்துக்கு மேம்பாலமும் அறிவிக்கப்பட்டு தற்போது வரை இந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
நெல்பேட்டை, தெற்கு வாசல் வழியாக விமானநிலையத்துக்குச் செல்வோர், போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. அவசரத்துக்கு விமானநிலையத்துக்குச் செல்வதற்கு மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்த முடியவில்லை. மதுரையில் நகர் பகுதியில் இருந்து விமானநிலையத்துக்குச் செல்வதற்கு ஒரே வழியாக இந்தச்சாலைதான் இருப்பதால் நகர வளர்ச்சியின் பொதுநலன் கருதி பாராபட்சமின்றி, அரசியல் குறுக்கீடு இன்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்தச் சாலையை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.5 கிமீ. செல்ல 30 நிமிடம்: அதுபோல், யானைக்கல், சிம்மக்கல் வழியாக பெரியார் பேருந்து நிலையம் செல்ல போக்குவரத்து மிகுந்த நேரத்தில் 2.5 கிமீ. செல்ல குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. சில நேரங்களில் போக்குவரத்து முடங்கிவிடும். இதன் மூலம் மதுரையின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்குவதால் யானைக்கல் - பெரியார் பேருந்து நிலையப் பாலமும் உடனடியாக அமைப்பது அவசியமாகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முந்தைய திமுக ஆட்சியில் மதுரை பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்ட பாலம், முழுமையாக முடியாமல் பாதியிலே நிற்கிறது. இந்த பாலத்துக்கு ஒதுக்கிய நிதியும் வீண். மக்களும் பயன்படுத்த முடியவில்லை. இந்த பாலத்தின் மீதமுள்ள பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை விமானநிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் மட்டுமே பெரிய ரக விமானங்கள் விமானநிலையத்துக்கு வந்து செல்ல முடியும். சர்வதேச விமானநிலையமாக மதுரையை அறிவிக்க முடியும். ஓடுபாதை விரிவாக்கத்துக்கு ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டம் கைவிடப்பட்டநிலையில் மாற்றுத் திட்டத்துக்கு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தி, அதில் நான்குவழிச்சாலை அமைத்து விமானநிலைய ஓடுபாதையை விரிவுபடுவத்த வேண்டும்.
ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் இணக்கமின்றிச் செயல்படுவதால் இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. தமிழக அரசு, மாற்றுத் திட்டத்துக்கு நிலம் ஒப்படைக்க முன் வராததால் விமானநிலைய விரிவாக்கத்துக்கு ஏற்கெனவே ஒதுக்கிய நிலத்தைச் சுற்றி விமானத் துறை ஆணையம் சுற்றுச்சுவர் கட்டத் தொடங்கியுள்ளது.
மேலமடை சந்திப்பு பாலம்: மதுரை நகரில் கோரிப்பாளையத்துக்கு அடுத்து ‘ரிங்’ரோடு, சிவகங்கை சாலை, அண்ணா நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.கே.நகர் பகுதிகளை இணைக்கும் மேலமடை சந்திப்பில் திமுக ஆட்சியில் பாலம் அறிவிக்கப்பட்டு தற்போது அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. பாலம் அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன
என்பது தெரியவில்லை. ‘ரிங்’ ரோடு, கருப்பாயூரணி, வீரபாஞ்சான் போன்ற இடங்களில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இந்தச் சந்திப்பில் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பெற்றோர், தினமும் பல.கி.மீ., தூரத்துக்கு வரிசையில் காத்திருக்கும் அவலம் உள்ளது.
முட்டுச்சந்தோடு நிற்கும் சாலை: நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து மதுரை நகரின் நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் வட கரையில் 8 கி.மீ.,க்கும், தென் கரையில் 8 கி.மீட்டருக்கும் விளாங்குடி முதல் விரகனூர் வரை ரூ.384 கோடியில் நான்கு வழிச்சாலை அமைத்தது. ஆனால், இந்தச் சாலையை தொடர்ச்சியாக அமைக்காததால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. தென்கரை புட்டுத்தோப்பு பகுதியில் முட்டுச் சந்தில் போய் முடியும் இந்தச் சாலையில் மேம்பாலம் அமைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் சாலையை முழுமையாக அமைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரைக் கல்லூரி ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்கவோ அல்லது புதிய பாலம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் கிடக்கும் இந்தப் போக்குவரத்து திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் முடித்தால் மட்டுமே மதுரையின் போக்குவரத்து நெரில் ஓரளவு தீரும். அதிமுக ஆட்சியில் அறிவித்த ‘பஸ்போர்ட்’ திட்டத்துக்கு நிலம் ஒப்படைக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பாதாளசாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்களை ஒப்பந்தப்புள்ளி எடுத்த நிறுவனங்கள், போதிய தொழிலாளர்கள் இல்லாமல் மந்தமாகப் பணிகளை மேற்கொள்கின்றனர். முக்கியச் சாலைகள் முதல் குடியிருப்புகள் வரை குழி தோண்டிப்போட்டு மோசமாக உள்ளது. மக்கள் மழைக் காலத்தில் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. வாகனங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
மதுரையை மேம்படுத்த அறிவித்த 80 சதவீத திட்டங்கள் இன்னும் முழுமையடையாமலும், வெறும் அறிவிப்புகளோடும் அப்படியே நிற்கின்றன. அறிவித்து செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிப்போய் உள்ள திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனம் பெற வேண்டும் என்றும், அந்த திட்டங்களை கலைஞர் நூலகத்தைபோல் முடுக்கிவிட்டு முடித்தால் மதுரை பெரும் வளர்ச்சியும், புதுப்பொலிவும் பெறும் என்றும் இதற்கு உள்ளூர் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
‘எய்ம்ஸ்’ தாமதத்துக்கு யார் காரணம்? - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டியும் இன்று வரை சுற்றுச்சுவரைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவிலை. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. எப்போது கட்டுமானப்பணி தொடங்கும் என்று உறுதியான தகவல் இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நீடிக்கும் அரசியல் மோதலே, இந்த மருத்துவமனை கட்டுமானப்பணி தாமத்துக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்குவதில் ஏற்படும் தாமதத்துக்கு ஜைக்கா நிறுவனத்தின் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது என்றும் ‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் நிதி பெறுவதற்கான தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்யவில்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகிறார். ஆனால், மத்திய அரசோ, திட்டமிட்டபடி ‘எய்ம்ஸ்’ திறக்கப்படும் என்று மட்டும் கூறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago