தமிழர்களின் ஹாட்ரிக் சாதனை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விழுப்புரம் வீரமுத்துவேல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர் வீரமுத்துவேல். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பழனிவேல், ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978-ல் பிறந்த வீரமுத்துவேல், விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் பள்ளிப் படிப்பையும், பின்னர், அங்குள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமாவும் படித்தார்.

பின்னர், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டப் படிப்பை முடித்தார். திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (ஆர்இசி) எம்.இ. படிப்பை முடித்தார்.

கடந்த 2004-ல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக கடந்த 2019 டிச.9-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

சந்திரயான்-2 திட்டப் பணியிலும் பணியாற்றிய வீரமுத்துவேல், அப்போது நாசாவுடன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.

சந்திரயான்-1 திட்ட இயக்குநராக பொள்ளாச்சி அடுத்த கோதவாடியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்ட இயக்குநராக சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடம் வீரமுத்துவேல் கூறியபோது, ‘‘சந்திரயான்-3 விண்கலத்தை புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கி நிலவில் தரையிறக்கும் வரை அனைத்து பணிகளும் சவால் நிறைந்தவை. எனவே, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நிலவில் தரையிறங்கும் ரோவர் சாதனத்தில் ஒரு சக்கரத்தில் நம் நாட்டின் அசோக சக்கர சின்னமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. நான் உட்பட தமிழகத்தை சேர்ந்த பலர் இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளோம். ஒரு தமிழனாக மட்டுமின்றி, இந்தியனாக இதில் எனது பங்களிப்பு உள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE