கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பீட்டிலான தானியக் களஞ்சியம், ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) கன்னியாகுமரி மாவட்டம், பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பீட்டிலான தானியக் களஞ்சியம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான தானியக் களஞ்சியம் திருக்கோயில் அருகில் 36 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இது திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் பூஜை செய்வதற்கும், கூட்டு பிராத்தனை செய்வதற்கும் வெங்கடாஜலம் ஐயர் என்பவருக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியிருந்தது. வெங்கடாஜலம் ஐயர் மோசடியாக ஆவணம் தயார் செய்து இச்சொத்தில் தேவஸ்தானம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை (Permanent Injection) கோரி நாகர்கோவில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், மேற்படி இடத்தினை திருக்கோயில் நிர்வாகம் சுவாதீனம் எடுத்துவிட கூடாது என்பதற்காக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான அனைத்து வழக்குகளிலும் கோயில் நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டபிரிவு 78 –ன் கீழ் திருநெல்வேலி இணை ஆணையர் நீதிமன்றத்தில் திருக்கோயில் சார்பில் எதிர் தரப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டதில் மேற்படி தானியக் களஞ்சியத்தை சுவாதீனம் எடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவினை எதிர்த்து விஸ்வ இந்து வித்யா கேந்திரா தலைவர் வேதாந்தம் என்பவர் சார்பில் ஆணையர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு (Revision Petition) தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் வேதாந்தம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையரது சீராய்வு மனுவில் தீர்ப்பு வழங்க கூடாது என கோரியிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இணை ஆணையரின் சட்டபிரிவு 78 –ன் உத்தரவினை செயல்படுத்த தடை ஏதுமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி இன்று (ஜூலை 14) கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் டி.ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தானியக் களஞ்சியம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.18 கோடியாகும்.

இந்நிகழ்வின்போது காவல்துறை சார் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி பகவதியம்மன் திருக்கோயில் மேலாளர் எஸ்.ஆனந்த் ஆய்வாளர்கள் சுஜீத், சாந்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE