குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் திடீர் புகை - பயணிகள் அதிர்ச்சி; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் நேற்று திடீர் புகை ஏற்பட்டதால் அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு வரை செல்லும் டபுள் டெக்கர் விரைவு ரயில் நேற்று காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் - விரிஞ்சிபுரம் இடையே ஜோலார்பேட்டை நோக்கி அந்த ரயில் காலை 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, சி 6 பெட்டியின் சக்கரத்தில் திடீரென புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில் இன்ஜின் ஓட்டுநர் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

டபுள் டெக்கர் ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டு இருவரும் சிறிது நேரத்தில் ரயில் சக்கரத்தை சீரமைத்தனர். அதன்பிறகு 30 நிமிடம் டபுள் டெக்கர் ரயில் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனைத்தொடர்ந்து, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிருந்தாவன் விரைவு ரயில், அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை செல்லும் மெமோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

பிரேக் பைன்டிங்: இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயிலை நிறுத்த மற்றும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு சக்கரத்திலும் இரண்டு ‘பிரேக் கட்டைகள்’ ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். சில நேரங்களில் இது செயல்படாமல் சக்கரத்துடன் இறுக்கிக் கொள்ளும். இதனால் சக்கரத்துக்கும் பிரேக் கட்டைக்கும் இடையே அதிக வெப்பம் ஏற்பட்டு சில நேரங்களில் புகை வெளிவரும். இதனை 'பிரேக் பைன்டிங்' என்று சொல்வார்கள்.

டபுள் டெக்கர் விரைவு ரயிலில் பிரேக் பைன்டிங் ஏற்பட்டதால் திடீர் புகை ஏற்பட்டது. இதனால், ஆபத்து நேரிட்டதாக ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதனை சீரமைப்பது எளிய முறை என்பதால் ரயில் இன்ஜின் ஓட்டுநரே அதனை சரி செய்தார். எனினும் சரியான நேரத்தில் கண்காணிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE