பிரான்ஸ் தேசிய தின விழா - முதல்முறையாக பிரான்ஸ் கொடி வண்ணத்தில் ஜொலித்த புதுச்சேரி தலைமைச் செயலகம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புரட்சியை நினைவுகூறும் வகையிலும் பேரணி, தீப்பந்த ஊர்வலத்தை நினைவுக்கூறும் வகையிலும் மின்விளக்கு ஊர்வலம் நடந்தது. அதேபோல், முதல்முறையாக புதுச்சேரி தலைமைச் செயலகம் பிரான்ஸ் கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் ஜொலித்தது.

கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். புதுச்சேரியில் இன்று இரவு நடைபெற்ற மின்விளக்கு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடற்கரை சாலையில் டூப்ளே சிலையில் இருந்து தொடங்கி ஊர்வலம் எழுச்சியாக நடந்தது. இந்நிகழ்வில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தொடங்கி பிரெஞ்சு தூதரகத்தினர் வரை பலரும் பங்கேற்றனர். கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் இதை பார்த்தனர்.

பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் இன்று நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

முதல்முறையாக பிரான்ஸ் கொடி வண்ணத்தில்: புதுச்சேரியில் இந்திய குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தலைமைச்செயலகம் இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் ஜொலிக்கும். அதேபோல் இன்று பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமைச்செயலகம் அந்நாட்டு கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முதல்முறையாக ஜொலித்தது. பிரான்ஸ் தூதரகமும் இதேபோன்று மின்னொளியில் ஜொலித்தது.

நாளை காலை கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கீதங்கள் ஒளிபரப்பாகும். மாலையில் கடற்கரைச் சாலையில் வானவேடிக்கை நிகழ்வுகள் நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE