மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சென்னையில் ஜூலை 24 முதல் முகாம்: மேயர் பிரியா தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஜூலை 24-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம் தொடங்கப்படும் என்று சென்னை மாநகர மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் 15-ம் தேதி முதல், மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்தத் தொகையை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை, 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில் உள்ள தகுதிவாய்ந்த பயனாளிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாநகர மேயர் மற்றும் ஆணையர் தலைமையில், அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர மேயர் பிரியா கூறியது: "வரும் ஜூலை 24-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான முகாம்கள் தொடங்கப்படவுள்ளன. இதற்காக சென்னையில் 3,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. சென்னையில் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இதில், தகுதிவாய்ந்த பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE