பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? - காரணங்களை பட்டியலிட்டு சட்ட ஆணையத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சட்டங்களில், ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என்று இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அவஸ்திக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பன்முகச் சமூகக் கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுகிறேன்.

சில சீர்திருத்தங்களின் அவசியத்தை தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்புக்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது. பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழக அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுகிறேன்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்: மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, "ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை" உறுதி செய்துள்ளது. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன. அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்துக்கு இடம் மற்றும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை. இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுகிறது.

எனது, 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளது. அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்துக்கும் வழிவகுக்கும்.

தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுகிறேன்.

கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம்: வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா. பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும். பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம்.

ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன்கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுகிறது. பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது. பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாக கருதப்படும். இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும்.

கூட்டாட்சி அமைப்பு: இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது. அவற்றின் தனித்துவமான சமூக-கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது. தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும், மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுகிறது. மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும். தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒருங்கிணைப்பு: பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது. முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம்.

வரலாற்றுப் பின்னணி: இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணமித்துள்ளன. பல்வேறு சமூகங்களின் வரலாற்று, கலாச்சார மற்றும் மத சூழல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன. பொது சிவில் சட்டத்துக்கான முன்மொழிவு இந்த வரலாற்று அம்சத்தை அங்கீகரிக்கத் தவறுவதுடன், பல்வேறு மதக் குழுக்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகாத ஒரு சட்டத்தைத் திணிக்க முயற்சிக்கிறது.

சிறுபான்மையினர் உரிமைகள்: அரசியலமைப்பின் 29-வது பிரிவின்மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டாரக் கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, அத்தகைய பழங்குடி சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும். அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது.

சமூகப் பொருளாதார தாக்கங்கள்: நமது சமூகத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன. அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேமாதிரியான அணுகுமுறை தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும்.

இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை: எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம்.

தற்போதைய நிலையில், மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இச்சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது.

மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்