புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்: அதிமுக

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு உறுதியுடன் செயல்படுத்த வேண்டுமென அதிமுக தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மாநிலத்துக்கு நன்மை பயக்கக்கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த கால காங்கிரஸ் - திமுக அரசு முழுமையாக செயல்படுத்தாமல் திட்டமிட்டு கிடப்பில் போட்டனர். ரூ.910 கோடி அளவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தும் கடந்த ஆட்சியில் ரூ.130 கோடிக்கு மட்டும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அறிவிக்கப்பட்டு அதில் ரூ.60 கோடிக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டது. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு முழுமையாக கவனத்தை செலுத்தவில்லை.

இந்தத் திட்டத்துக்கு ஓராண்டு நீட்டிப்பு பெற்று சுமார் ரூ.950 கோடி அளவுக்கு திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி இரண்டு மூன்று திட்டங்களுக்கு முன் உரிமை வழங்கப்பட்டது. பேருந்து நிலைய விரிவாக்கம் நவீன படுத்துதல், பெரிய மார்க்கெட் விரிவாக்கம் நவீன படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.100 கோடி அளவில் திட்டம் வரையறுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

அந்தப் பணிகளை செயல்படுத்த விடாமல் சில சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் போர்வையில் முட்டுகட்டை போட்டு தடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் எந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்துவதாக இருந்தாலும் பல கட்ட ஆய்வுக்கு பிறகு தான் அந்தத் திட்டங்களை அமல்படுத்துவார்கள். அந்தத் திட்டம் செயல்படுத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு பணி செய்வதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சிலர் அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். முதல்வர் ரங்கசாமி இவற்றை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் புதுச்சேரியில் ஆளும் அரசு தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கூட்டணி கட்சியில் இருந்தாலும் இந்த அரசை கண்டித்தும், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரக் கோரி அரசை வலியுறுத்தி ஓரிரு நாளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE