எதிர்கால தலைமுறையின் அறிவாற்றலை பெருக்கும் வகையில் தலைநிமிர்ந்து நிற்கும் நூலகம் - தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்கால தலைமுறையின் அறிவாற்றலை பெருக்கும் வகையில் தென் தமிழகத்தின் அறிவுத் திருக்கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் அரசு சார்பில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாதம்தோறும் அவர் நினைவாகபயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த 2008-2009-ல் அண்ணா நூற்றாண்டை கருணாநிதி முதல்வராக இருந்து கொண்டாடியதுபோல, தற்போது கருணாநிதி நூற்றாண்டை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக கொண்டாட பல முன்னெடுப்புகளை செய்து வருகிறேன்.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சி, கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றி கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன்15-ம் தேதி கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை,ஜூன் 20-ம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டன. எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் ஜூலை 15-ம் தேதிமதுரையில் உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைக்க உள்ளேன்.

புத்தகங்கள் மீது கருணாநிதி கொண்டிருந்த ஆர்வம், காதலையும், அவரது ஆழமான வாசிப்பு, படைப்பாற்றலையும் அனைவரும் அறிவார்கள். பள்ளிப் பருவத்தில் எழுத தொடங்கி, 94 வயது வரை ஓயாமல் எழுதியவர். அவர் எழுதிய பக்கங்கள் 2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவரது நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைத்துவிடலாம். சிறுகதை, புதினம், நாடகம், உரைநடை, கடிதம், கட்டுரை, கவிதை, தன்வரலாறு என எண்ணற்ற நூல்களை தமிழ் சமுதாயத்துக்கு தந்தவர்.

சென்னை கோட்டூர்புரத்தில் கருணாநிதி உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில்மகேஸ் ஆகியோர் முழுமையாக நிறைவேற்றியுள்ளனர். அடித்தளம், தரைதளம், அதனுடன் 6 தளங்கள் என 2.13 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நான் எண்ணியதைவிடவும், வேறு யாரும் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் எதிர்கால தலைமுறையின் அறிவாற்றலை பெருக்கும் வகையில் தென் தமிழகத்தின் அறிவுத் திருக்கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அது வருங்கால தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கும்படியான வாய்ப்புகளுக்கு வாசலாக, வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும்.

இந்த நூலகம், படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி வளர்ப்பதற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாக கற்று, உலகத் தரத்துக்கேற்ப இளைய தலைமுறையினரை உயர்ந்து நிற்கச் செய்ய துணைநிற்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE