‘டாஸ்மாக் கடைகளில் மினி குவாட்டர்...’ - செல்லூர் கே.ராஜு வேதனை

By செய்திப்பிரிவு

மதுரை; ‘‘டாஸ்மாக்கில் மினி குவாட்டரும் கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக கே.பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை மதுரை மாநகர அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில், அக்கட்சியினர் கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கும், கட்சித்தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், ‘‘மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். அதிமுகவுக்கு ஏறுகாலம் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு இனி இறங்கு காலம்தான். டாஸ்மாக்கில் மினி குவாட்டரும் கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால், அவர்கள் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? தமிழக அரசின் செயல் மன வேதனையாக இருக்கிறது.

திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த தலைமுறையை கெடுத்தவர். அடுத்த தலைமுறையினரை முதல்வர் ஸ்டாலின் கெடுக்கிறார்.

கே.பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இரண்டு கோடியே 25 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கொடுத்தாலும் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் திமுகவுக்கு. கலைஞர் நூலகம் திறப்பு விழாவுக்கு செயற்கையாக கூட்டத்தை திரட்ட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE