தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: "நான் இன்று திட்டவட்டமாக சொல்கிறேன். டாஸ்மாக்கின் நேரத்தை மாற்றும் எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கடந்த முறை நான் கொடுத்த முழு பேட்டியையும் கேட்டீர்கள். ஆனால், உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வரவில்லை. வெளியிலிருந்து கேட்பவர்கள், அவர்களுக்கு தேவையானப் பேட்டியை மட்டும் கத்தரித்து எடுக்கின்றனர். எனவே, நான் இன்று திட்டவட்டமாக சொல்கிறேன். டாஸ்மாக்கின் நேரத்தை மாற்றும் எண்ணமே அரசுக்கு கிடையாது.

டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் யதார்த்தமாக, இதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது? அந்த சிக்கல்களை சாதாரணமாக ஒதுக்கி தள்ளிவிட்டு போகமுடியவில்லை. ஏனென்றால், மற்ற நேரங்களில் மது வாங்க வருபவர்கள் தவறான இடங்களுக்குச் சென்று வாங்குகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மற்ற நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கூறினோம்.

அரசு ஏதோ 24 மணி நேரமும் மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிடும் என்பதுபோல் பேசினால் நாங்கள் என்ன செய்வது? எனவே, திட்டவட்டமாக கூறுகிறேன், டாஸ்மாக்கைப் பொருத்தவரை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், மற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தொழிலாளர்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதைத் தீர்க்க நாங்கள் தொழிற்சங்கங்களுடன் பேசுகிறோம்.

குடித்துவிட்டு மதுபாட்டில்களை வெளியே வீசுவதால் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகளை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு செல்ல முடியாது. அதற்கு என்ன வழிவகை, என்ன தீர்வு என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தாக வேண்டும். அதிகாரிகள், தொழிற்சங்கம், ஊடகங்கள், பொதுமக்களிடம் பேசுகிறோம். அவர்கள் பல கருத்துகளைச் சொல்கிறார்கள். அதில் அரசின் கொள்கைக்கு முரணாக இருப்பதை ஒதுக்கிவிட்டு, மற்றவைகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறோம்.

அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் எப்படி நடக்கிறது. அதை ஒப்பிட்டு பார்ப்பதற்காக அங்கிருந்து தகவல்களை வாங்குகிறோம். எங்கள் துறை அதிகாரிகள் முழுக்க முழுக்க அதைத்தான் பார்த்துக் கொண்டுள்ளனர். டாஸ்மாக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் சாதாரணமானது அல்ல. அங்கு வேலை செய்வதால், அனைவரும் அவர்களை ஒதுக்கித்தான் பார்க்கின்றனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இன்று நான் இவ்வளவு பேசியிருக்கிறேன். இதில் ஏதாவது இரண்டு வார்த்தையை எடுத்தால், அது தவறாக வரலாம். எனவே, நான் முன்னாடியும், பின்னாடியும் என்ன சொன்னேன் என்பதை மொத்தமாக போட்டால்தான் சரியாக வரும்" என்றார்.

அப்போது 90 மி.லிட்டர் விற்பனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், "இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே அளித்த பேட்டியிலும் கூறியிருக்கிறேன். இதில் என்ன கருத்துகளாக இருந்தாலும், நாங்கள் வெளிப்படையாக பேசி, வெளியில் இருந்து எல்லா கருத்துகளையும் உள்வாங்கி, அதன்பிறகுதான் அதில் முடிவெடுக்கப் போகிறோம் என்றுதான் கூறியிருந்தேன்.

அதேபோல், மதுபாட்டில்கள் என்னென்ன சிரமங்களைக் கொடுக்கிறது என்று சொன்னேன். அந்த பாதிப்புகளைக் களைவதற்காக டெட்ரா பாக்கெட்டுகள் கொண்டுவர வேண்டும் என்று சொன்னால், அதிலும் சிலர் மறுப்பு கூறுகின்றனர். அதையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எனவே, பெரும்பகுதியானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்துதான் அதில் முடிவெடுக்கப் போகிறோம். டெட்ரா பாக்கெட் விற்பனை குறித்து அரசு முடிவெடுக்கவில்லை.

90 மி.லி மது விற்பனை தொடர்பாக அரசு எதுவும் முடிவு எடுக்கவில்லை. காரணம், மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை உள்ளது. அங்குசென்று ஆய்வு செய்தபோது அதிலும் நிறைய பிரச்சினைகளைக் கூறுகின்றனர். எனவே, அதுதொடர்பாகவும், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுபார்த்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்காலாமா? என்று பார்க்கப்பட்டது. எனவே, அதில் சிக்கல் இருக்கும்பட்சத்தில், அரசுக்கு அது தேவையில்லை.

500 கடைகளை மூடியதன் நோக்கம், மது பழக்கம் குறைய வேண்டும் என்பதுதான். இன்றுகூட முதல்வர் பேசும்போது, எங்கெங்கெல்லாம் பள்ளி, கல்லூரி, கோயில்கள் பக்கத்தில் டாஸ்மாக் கடைகள் உள்ளதா என்பது குறித்து மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதுபோன்ற இடங்களில் இருக்கும் கடைகளை நாங்கள் கண்டிப்பாக மூட இருக்கிறோம். இது வியாபாரம் நோக்கத்துக்காக அல்ல.

அவரிடம், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களுக்கான விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. அதுபோன்ற புகார்கள் குறைவான இடங்களில்தான் இருந்தது. பெரும்பகுதி இதை கட்டுப்படுத்தியாகிவிட்டது. எங்காவது ஒன்றிரண்டு இடங்களில் அதுபோன்ற தவறுகள் நடக்கலாம்.

அவ்வாறு நூறு சதவீதம் நடைபெறவில்லை என்று கூறவில்லை. இரண்டொரு இடங்களில் இருக்கலாம். அனைத்து இடங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்தால், சமூக ஊடகங்களில் இதுகுறித்த தகவல்கள் பரவாது. மற்ற இடங்களில் இல்லை, இங்கு மட்டும் வசூலிக்கப்படுகிறதே என்கிற கோபத்தில்தான் இந்த செய்திகள் பகிரப்படுகிறது. அதுபோல புகார் வந்த கடைகளில் பணியாற்றியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பணியாளர்களைப் பொருத்தவரை, அரசு 18 தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி, எழுத்துப்பூர்வமாக அவர்களுக்கான அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிட்டுள்ளனர். சம்பளப் பிரச்சினை, மதுபாட்டில்கள் உடைந்து வீணாவதை ஈடுகட்டுவதைக் கணக்கிட முடியவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரியாக இது நிகழ்கிறது. அதேபோல், வாடகை பிரச்சினை, இறக்கு கூலி, மின் கட்டணம் இவை எல்லாவற்றிலும் பல பிரச்சினைகளை டாஸ்மாக் பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

அரசு சார்பில், அதை மூடி மறைக்க நான் தயாராக இல்லை. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தொழிற்சங்கங்களுடன் பேசி மனுக்களைப் பெற்றுள்ளோம். தற்போது, உள்துறை செயலரும், நிர்வாக இயக்குநரும் இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். எனவே, இந்த பணிகள் முடிய ஒருவாரம் முதல் 10 நாட்களாகும். அதுமுடிந்தவுடன் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப்பேசி அதில் நிவாரணம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE