வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்க சதி: பாஜக மீது வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்க சதி செய்வதாக பாஜக மீது வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மக்களுக்காக குரல் எழுப்பும் தலைவர்களின் குரல்வளையை நசுக்க முயற்சிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி கூறியதாவது: “நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கக் கூடாது என்பதற்காக பாஜக தன்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அவரது நீதிமன்ற வழக்கினை வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது, நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி எழுதுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுகிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியுடன் முழுமையாக இருக்கின்றது என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

இந்திய நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் இந்தப் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாநிலம், தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது. ராகுல் காந்திக்கு நீதி என்பதைவிட, ராகுல் காந்தி பேசியதை நியாப்படுத்துவதற்கு உண்டான வழிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் அதானியை பற்றித்தான் சொன்னார். ஆனால், அதானி விஷயங்களை மறைத்துவிட்டு வழக்கை கொண்டு வருகின்றனர்.

ஆகவே, நாடாளுமன்றத்தில் அதானி குறித்த பதில்களை கேட்கின்றோம். அதேபோல் ராகுல் காந்தி மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம். இதுதான் எங்களுடைய வேண்டுகோள். இந்த இரண்டையும் பாஜக அரசு செவிசாய்க்காமல் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்குவதற்கு சதி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிச்சயம் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE