டாஸ்மாக் சர்ச்சை | “அமைச்சர் முத்துசாமி பேசுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” - அன்புமணி

By செய்திப்பிரிவு

திருச்சி: "சமூக அக்கறை கொண்ட ஒருவர் மதுவிலக்குத் துறைக்கு பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

திருச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அமைச்சர் முத்துசாமி முதலில் இந்தத் துறையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் முத்துசாமியை மிக முதிர்ந்த அரசியல் தலைவராக நான் பார்க்கிறேன். அவர் இந்த துறையின் அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டபோது முதலில் எனக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது.

சமூக அக்கறை கொண்ட ஒருவர் இந்த துறைக்கு பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது.

மதுவிலக்குத் துறை என்றால், எப்படியாவது மதுவின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் மத்தியில் மது பயன்பாட்டைக் குறைக்கும் வகையில்தான் மதுவிலக்குத் துறை செயல்பட வேண்டும். ஆனால், இது மது விற்பனைத் துறை என்று நினைத்துக் கொண்டுதான், அந்த துறைக்கு அமைச்சராக வருகிறார்கள் போல என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே, மதுவிலக்குத் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மது விற்பனை ரூ.36 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு தமிழகத்தில் மது விற்பனை ரூ.45 ஆயிரம் கோடி. இந்த தொகைகள் கணக்கில் வந்தவை, கணக்கு இல்லாமல் எவ்வளவு என்று தெரியாது.

ரொம்ப சிரமப்பட்டு வருந்தி, தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடியுள்ளனர். திமுக நிறுவனர் அண்ணா பூரண மதுவிலக்கு கொள்கையை கடைபிடித்தவர். அவரைப் பின்பற்றும் திமுக ஆட்சி அதை கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE