கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், "நூற்றாண்டு நாயகர் கருணாநிதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றுகிற வகையில், மாதந்தோறும் அவர் நினைவாகப் பயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை 2008-2009ம் ஆண்டுகளில் கருணாநிதி, முதல்வர் பொறுப்பில் இருந்து எத்தகைய சிறப்பாகக் கொண்டாடினாரோ, அதுபோல கருணாநிதி நூற்றாண்டு விழாவை முதல்வர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் மிகச் சிறப்போடும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்ற உறுதியை மனதில் ஏற்றுக்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.

பேரறிஞர் அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவைரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள். அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலரின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜூன் 15ம் நாள் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன். மிகக் குறுகிய காலத்தில் இந்த மாபெரும் மருத்துவமனை கட்டப்பட்டு, மிகப் பெரிய அளவிலான சிகிச்சைகள் எளிய மக்களுக்குக் கிடைத்திட வழிவகை காணப்பட்டுள்ளது. தன் ஆட்சிக்காலம் முழுவதும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்திப் பெருக்கியவர் கருணாநிதி. கடைக்கோடி மனிதர்களுக்கும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளித்திடவும், கடைக்கோடி கிராமத்தில் விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்திடும் 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியும் மக்கள் நலன் காத்த மாபெரும் தலைவரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளை முழுவீச்சில் தொடங்கி ஏழை - எளியோரின் உயிர் காக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

ஜூன் 20ம் நாள் கருணாநிதியை நமக்கு வழங்கிய திருவாரூரில், அவருடைய அன்னை அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அருகே கட்டப்பட்ட எழில்மிகு கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, 21ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தனது 95 ஆண்டுகால வாழ்வில், 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையுடன், காலத்திற்கேற்ற வியூகங்களுடன் மொழி - இன - பண்பாடு காத்து, தமிழகத்தின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர் நமது தலைவர் கருணாநிதி. அவரது வரலாற்றை இன்றைய தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அறிந்து கொள்ளும் வகையில், திருவாரூர்த் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்திற்கு நாள்தோறும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். வார நாட்களில் சராசரியாக 800 பேர், விடுமுறை நாட்களில் ஆயிரத்திற்கும் மேல் மக்கள் திரண்டு வந்து நூற்றாண்டு நாயகரின் வரலாற்றைக் கண்டு மகிழ்கிறார்கள்.

சிறிய கிராமத்தில் - எளிய பின்னணியில் பிறந்து அரசியல், இலக்கியம், திரைப்படம், நாடகம், கவிதை, இதழியல், சொற்பொழிவு, இன்னும் பல கலைத்திறன்களை வளர்த்துக் கொண்டு, தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலவராக பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் காணச் செய்து, இந்திய அரசியலின் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற கருணாநிதியின் பேராற்றல் இளந்தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியதாக, உந்து சக்தியாக, எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் உள்ளது.

எதிர்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் கருணாநிதியின் புகழ் போற்றும் வகையில், ஜூலை 15ம் நாள், தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன். நூலகங்கள் என்பவை புத்தகங்களால் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் மீது நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி கொண்டிருந்த ஆர்வத்தையும், காதலையும், ஆழமான வாசிப்பையும், அவரது படைப்பாற்றலையும் அனைவரும் அறிவர். தன்னுடைய பள்ளிப் பருவத்தில் எழுதத் தொடங்கி, 94 வயது வரை ஓயாமல் எழுதியவர் கருணாநிதி. அவர் எழுதிய பக்கங்கள், 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இரண்டு இலட்சம் என்ற பெருமையுடன், அவை அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்ட இலட்சியத்தை நாடெங்கும் பரப்புவதற்காக எழுதியவை என்ற பெருமிதமும் இணைந்தே நிலைத்திருக்கிறது.

தலைவர் கருணாநிதி எழுதிய நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைத்து விட முடியும். சிறுகதை, புதினம், நாடகங்கள், உரைநடைகள், கடிதங்கள், கட்டுரைகள், கவிதைகள், தன்வரலாறு என எண்ணற்ற நூல்களை இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்தவர். தன் இலட்சிய எழுத்துகளால் சமுதாயத்தைச் சில அங்குலங்கள் உயர்த்தியவர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கருணாநிதியின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தைத் திறந்து வைப்பதில் உங்களில் ஒருவனான நான் பெருமை கொள்கிறேன்.

2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புகள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.

கருணாநிதி, சென்னை கோட்டூர்புரத்தில் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிலும் வல்லவர் எனப்படும் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர்களின் நெஞ்சமறிந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

உங்களில் ஒருவனான நான் எண்ணியதைவிடவும், வேறு யாரும் எண்ணிப் பார்க்க முடியாத வகையிலும் எதிர்காலத் தலைமுறையின் அறிவாற்றலைப் பெருக்குகின்ற வகையில் தென் தமிழகத்தின் அறிவுத் திருக்கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அது வருங்காலத் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கும்படியான வாய்ப்புகளுக்கு வாசலாக - வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும்.

கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மதிப்பிற்குரிய நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையினர், மாணவமணிகள் கலந்துகொள்ளும் அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

படிக்கும் பழக்கம் குறைந்து வருகிற காலத்தில் இத்தகைய பிரம்மாண்ட நூலகம் எதற்கு என்று வயிற்றெரிச்சல் அரசியல்காரர்கள் குமுறிக் கொண்டிருந்தாலும், மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்பதற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாகக் கற்று உலகத் தரத்திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களையும், இளைய தலைமுறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும்.

'ஏ, தாழ்ந்த தமிழகமே!' என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், பேரறிஞர் அண்ணா நிறுவிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கருணாநிதியின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழகமாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.

நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி புகழ் போற்றும் இன்னும் பல சின்னங்கள் அடுத்தடுத்து அமையவிருக்கின்றன. அத்தனையும் வடிவமைப்பில் எழில் மிகுந்தது. மக்களுக்கு என்றென்றும் பயன் தருவது, கருணாநிதியின் படைப்பாற்றலும் நிர்வாகத் திறனும் போலவே நிலைத்தப் புகழைப் பெறக்கூடியது.

சோழ மன்னர் கரிகாலன் கட்டிய கல்லணை ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பலன் தருவது போல, மாமன்னர் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து புகழ் ஒளி வீசுவது போல, கடல் கடந்து தமிழர் புகழை நிலை நாட்டிய மன்னர் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோயில் உயர்ந்து நிற்பது போல, பல்லவர் காலத்துப் படைப்புகள் நீடித்து நிலைத்திருப்பது போல, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டமும் - குமரி முனை வள்ளுவர் சிலையும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்வது போல, நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும். கருணாநிதியின் புகழை உரக்கச் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்