நசரத்பேட்டையில் நெரிசல் சிக்னலும் இயங்கவில்லை: சீர்படுத்த போலீஸும் இல்லை

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ’உங்கள் குரல்’ பிரத்யேக புகார் எண் சேவையை தொடர்பு கொண்டு, நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த வாசகர் கோதை ஜெயராமன் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ளது நசரத்பேட்டை. தமிழக தலைநகர் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் நசரத்பேட்டையில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ஊராட்சியாக உள்ள நசரத்பேட்டையை ஒட்டி, வரதராஜபுரம் மற்றும் அகரமேல் ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளன. இவ்விரு ஊராட்சிகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த 3 ஊராட்சிகளில் வசிக்கும் பெரும்பாலோர், சென்னை மற்றும் திருமழிசை, பெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாணவ-மாணவிகள் பூந்தமல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நாள்தோறும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை சிக்னலை கடந்துதான் பணியிடங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிக்னல் அடிக்கடி பழுது ஏற்படுவதால், முறையாக இயங்குவதில்லை. அதேபோல் இந்த சிக்னல் பகுதியில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸாரும், பெரும் பாலான நேரங்களில் சிக்னல் அருகே நின்று போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்துவதில்லை.

இதனால், நசரத்பேட்டை பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நசரத்பேட்டை பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையரக போக்கு வரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் தொடர் கண் காணிப்பில் ஈடுபட்டு, அந்த சிக்னல் முறையாக இயங்கவும், காலை 6 மணி முதல், இரவு 10 மணி வரை போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து சிக்னல் அருகே நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE