நெரிசலால் மூச்சு முட்டும் செங்கல்பட்டு; வரமாய் வந்த புதிய பேருந்து நிலையம்: விரைவில் பணிகளை தொடங்க கோரிக்கை

By பெ.ஜேம்ஸ்குமார்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்களின், 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், ரூ.40 கோடி மதிப்பீட்டில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வெண்பாக்கத்தில் 14 ஏக்கரில் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால், நகரின் குறுகிய இடத்தில் இயங்கி வந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளுக்கும் பயணிகளுக்கும் விடுதலை கிடைத்துள்ளது.

மாவட்ட தலைநகரான செங்கல்பட்டில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தற்போதைய பேருந்து நிலையம் அருகில், ரயில் நிலைய நுழைவாயில், மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவை அமைந்துள்ளன. மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தற்போது உள்ள பேருந்து நிலையம் அருகருகே உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராள மானவர்கள் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக பேருந்து நிலையம் பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் சிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து, ராட்டிணங்கிணறு வரை, தனியார் திருமண மண்டபங்களில், திருமணம் மற்றும் விழாக்காலங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென, நீண்டகாலமாக அரசிடம் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், வெண்பாக்கம் கிராமத்தில், 14 ஏக்கர் நிலத்தில், பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், சிஎம்டிஏ சார்பில், ரூ.40 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைய உள்ளது. இதற்கான இடத்தை அண்மையில் அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகளும், பணிமனையில் 67 பேருந்துகளையும் நிறுத்தலாம்.

தற்போதுள்ள பேருந்து நிலையம்.

மேலும், கார் பார்க்கிங் பகுதியில், 67 கார், மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். மேலும் 30 கடைகள் கட்டப்பட உள்ளன. செங்கல்பட்டு மக்களின், 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், இந்த அறி விப்பு செங்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கல்பனா

இதுகுறித்து செங்கல்பட்டை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, கல்பனா கூறியது: தமிழக அரசின் இந்த முயற்சி போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும். தினமும் காலை ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்வோர், கூட்ட நெரிசலால் குறித்த நேரத்துக்கு செல்லமுடியவில்லை. இந்த புதிய பேருந்து நிலையம் மூலம் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

செந்தில் பாலாஜி

வியாபாரி செந்தில் பாலாஜி: வெளி மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் செங்கல்பட்டு நகர மக்கள் வெளியூர் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. தற்போது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதன் மூலம், வெளியூர் பேருந்துகள் செங்கல்பட்டு நகரத்துக்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

கீர்த்தி

இல்லத்தரசி கீர்த்தி: பின்தங்கிய எங்கள் பகுதி, இந்த புதிய பேருந்து நிலையம் காரணமாக வளர்ச்சி அடையும். தமிழகம் முழுவதும் செல்ல இங்கேயே பேருந்து பய ணத்தை மேற்கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் இருந்து ஆட்சியர் அலு வலகம் வந்து செல்ல மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

பாரதி

வழக்கறிஞர் பாரதி: செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அருகில் பேருந்து நிலையம் அமைய உள்ளதால், நீதிமன்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் பல அரசு அலுவலகங்கள் அருகில் இருப்பதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசு விரைந்துபேருந்து நிலையத்தின் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.

மு.தாமோதரன்

தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.தாமோதரன்: செங்கல்பட்டுக்கு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வருவது வரவேற்கத்தக்க ஒன்று தான். மேலும், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இருந்து ராட்டினங்கிணறு வரை, சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தினால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும் பேருந்துகள் செங்கல்பட்டு நகரத்தின் உள்பகுதிக்கு வந்து செல்ல வேண்டும். சாலை விரிவாக்கமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

மு.முனிச்செல்வம்

செங்கல்பட்டை சேர்ந்த, வழக்கறிஞர் மு.முனிச்செல்வம்: நேதாஜி நகரில் தான் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 30 முதல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி 60 முதல், 70 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நேதாஜி நகர் பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுவது மிகவும் கவலைக்குரியதாகவும். அதே பகுதியில் ஏக்கர் கணக்கில் காலியாக உள்ள இடங்களை விட்டு விட்டு, குடியிருக்கும் வீடுகளை இடிப்பது நியாயமா என்ற கேள்வியை, தமிழக அரசிடம் கேட்க விரும்புகின்றேன்.

நாராயணன்

அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க துணை பொது செயலாளர் நாராயணன்: தற்போது பேருந்து நிலையமும் பணிமனையும் இரண்டுமே இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. இதனால், தினம் தினம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் பேருந்து இயக்குவதில் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் பேருந்து நிலையமும் பணிமனையும் அமைய இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

இதனால் பயணிகளுக்கு எளிதான சேவைகள் கிடைக்கும். மேலும், பேருந்துகள் பழுதடைந்தால் உடனடியாக மாற்று பேருந்து அல்லது பழுதடைந்த பேருந்தை சீர் செய்யவும் எளிதாக அமையும். விழா மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கவும் வசதியாக இருக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE