சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நேற்று (11-7-2023) எழுதியுள்ள கடிதத்தில், உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விழைவதாகவும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதில் மாநில அரசுகளுக்கு உதவிடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, பணவீக்கத்தைப் பொறுத்தவரையில், 2023 மே மாதத்தில், தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65% ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56% ஆகவும் இருந்தது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
» தமிழகத்தில் 186 ஹெச்ஐவி பரிசோதனை மையங்களை மூட உத்தரவு? - எய்ட்ஸ் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை
அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 10.07.2023 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள் / நியாயவிலைக் கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய சில உணவுப் பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும்." இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago