மதுரை | திருமங்கலம் அருகே ரயில்வே கேட்டை கடக்க தாமதம் ஆனதால் மாணவி உயிரிழந்த பரிதாபம்

By என். சன்னாசி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, மூடிய ரயில்வே கேட்டால் தாமதம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப நிகழ்வு நேர்ந்தது.

மதுரை திருமங்கலம் அருகிலுள்ள விருசங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரின் 19 வயது மகள் கப்பலூர் பகுதியிலுள்ள அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது பெற்றோர், உறவினர்கள் அவரை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருமங்கலத்தில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ், ரயில்வே பீடர் வழியாக வந்தது. அப்போது ரயில் வருகைக்காக அந்த ரோட்டிலுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. ரயில்வே கேட் பகுதியில் ஆம்புலன்ஸ் நிற்கும் தகவல் அறிந்து, மாணவியை டூவீலரில் வைத்து கேட் பகுதிக்கு கொண்டு சென்றனர் அவரின் உறவினர்கள். ஆனாலும், ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் ஆம்புலன்ஸில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

சுமார் 20 நிமிடத்துக்கு தாமதத்துக்கு பின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மாணவி வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகள் இறந்த சோகத்தில் இருந்த பெற்றோர்கள், ரயில்வே கேட் திறப்பதில் தாமதமானதால் தான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று மகளை காப்பாற்ற முடிய வில்லை என புகார் தெரிவித்தனர். இந்த இறப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE