சென்னையில் ரூ.442 கோடியில் 796 கி.மீ சாலைகள் விரைவில் சீரமைப்பு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் ரூ.442 கோடியில் 796 கி.மீ சாலைகள் விரைவில் சீரமைக்கடவுள்ளது. சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டது. தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் சாலைப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சென்னையில் ரூ.442 கோடியில் 796 கி.மீ சாலைகள் விரைவில் சீரமைக்கப்டவுள்ளது. நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 749 கி.மீ நீளத்துக்கு 4710 சாலைகள், ரூ.397 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து 40 பேருந்து தட சாலைகள், 20 கி.மீ நீளத்துக்கு ரூ.44 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE