‘விசாரணையில் கண்ணியம்’, ‘வன்மம் பரப்புவோரை கவனிப்பீர்...’ - காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் 10 அறிவுரைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சமூக வலைதளங்கள் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவோரை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர், காவல் துறை டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 10 முக்கிய அறிவுறுத்தல்கள்:

1) சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முறையாக முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவை மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வண்ணம் பெரிய நிகழ்வுகளாக உருமாறுவதை தவிர்க்க வேண்டும்.

2) அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், மிக மிக எச்சரிக்கையுடன் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்.

3) குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்போது, கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும். அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது. காவல் மரணங்கள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும்.

4) கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நம்முடைய தலையாய கடமை. பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

5) கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து என்னுடைய அறிவுரையின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால், தற்பொழுது கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர, தொய்வின்றி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுதலை உறுதி செய்திடவேண்டும். இது குறித்து வாரம்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்திக் கண்காணிக்க வேண்டும்.

6) மக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது நடுநிலைமை தவறாமல் இருத்தல் வேண்டும். புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அங்கேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்கவேண்டும்.

7) போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

8) சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையத் தளங்களின் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) தமிழக காவல்துறை என்பது நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, கடந்த மாதத்தை விட, குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை.

10) ஒவ்வொரு மாதமும் அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கு இணையவழியே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அனைத்து அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்