இருளில் மூழ்கிய பாம்பன் சாலை பாலம் - வாகன ஓட்டிகள் அச்சம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவுக்குச் செல்லும் இரண்டரை கி.மீ. நீள பாம்பன் சாலை பாலத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சில மின் விளக்குகள் மட்டுமே எரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் பாம்பன் பாலம் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் அச்சத்தோடு பாலத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்று ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் பயணிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பாம்பன் சமூக ஆர்வலர் சிக்கந்தர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டார்.

அதற்கு, பாம்பன் சாலைப் பாலத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மண்டபம் உதவிப் பொறியாளர் பெயரில் ஒரு மின் இணைப்பும், பாம்பன் உதவிப் பொறியாளர் பெயரில் ஒரு மின் இணைப்பும் என 2 மின் இணைப்புகள் உள்ளன. இந்த 2 மின் இணைப்புகளுக்கும் கடந்த 6 ஆண்டுகளாக ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்து 63 மின் கட்டணம் செலுத்தப்படவில்லை.

மேலும் பாம்பன் பாலத்தின் இரு பக்கமும் ரூ.45 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 52 மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஓராண்டாகின்றன. இதற்கான மின் இணைப்பை நெடுஞ்சாலைத் துறை பெறவில்லை. இதனால், இந்த மின் விளக்குகள் எரியவில்லை என பதிலளிக்கப் பட்டுள்ளது. பாம்பன் ஊராட்சித் தலைவர் அகிலா கூறுகையில், பாம்பன் சாலைப் பாலத்தை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்படி ஒப்படைத்தால் பாலத்தின் தூய்மைப் பணிக்காக 2 தூய்மை பணி யாளர்களையும், பாலத்தில் உள்ள மின் விளக்குகளையும் பராமரிக்க எலக்ட் ரீஷியனையும் நியமிப்போம். மின் கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க பாம்பன் ஊராட்சிக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE