சென்னை: “மக்களவைத் தேர்தல் வர இருப்பதால் அடுத்த ஓர் ஆண்டு காலம் மிகவும் முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையுடன் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா, தமிழக காவல் துறையின் புதிய தலைவராக சங்கர் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் என்பதால் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்களுடைய அனுபவத்தையும், திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டும் என்று இருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். காவல் துறை மற்றும் அனைத்து அரசுத் துறை செயலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பு தந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்று சொல்வதால், ஏதோ நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதத் தேவையில்லை. சட்டம் - ஒழுங்கானது பெரிய அளவில், பிரச்னைக்குரியதாக இல்லை என்பதுதான் நம்மை மட்டுமல்ல, மக்களையும் மகிழ்வித்து வரக்கூடிய செய்திதான்.
ஓர் அரசு நல்லரசாகச் செயல்படுவதற்கு சட்டம் - ஒழுங்கு முறையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு முக்கியமான காரணம், நமது அரசு சட்டம் - ஒழுங்கிற்குக் கொடுத்து வரக்கூடிய முக்கியத்துவம்தான். சட்டம் - ஒழுங்கை முறையாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதன் அடையாளம்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்.
» செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
» மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த 7 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு
நிம்மதியும், அமைதியும் இருக்கும் மாநிலத்தில்தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த வகையில் மிக மிக நிறைவான காலமாக இந்த இரண்டு ஆண்டு காலம் அமைந்துள்ளது. இதற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்கள் அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆறு மாதங்களில் காவல் துறையின் செயல்பாடுகள் மற்றும் குற்ற வழக்குகள், சட்டம் - ஒழுங்கு குறித்த நிலவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. காவல் துறையின் செயல்பாடுகள் மிக மிக திருப்திகரமாக உள்ளது. என்றாலும், அடுத்து வரும் ஓராண்டு காலம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.
பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து என்னுடைய அறிவுரையின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால், தற்பொழுது கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர, தொய்வின்றி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுதலை உறுதி செய்திடவேண்டும்.
போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சினை அல்ல! அது சமூகப்பிரச்னை! போதை என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதும்தான்.
போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையத் தளங்களின் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை என்பது நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, கடந்த மாதத்தை விட, குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.
உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகிய இருவரும் நான் மேலே கூறிய அறிவுரைகள் அனைத்தும், விடுதல் இன்றி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கு இணையவழியே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அனைத்து அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago