சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன. நேற்று முதல் சென்னை - மதுரை - சென்னை இடையே இருந்த 12 விமான சேவைகள் 16 சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சென்னை - கொச்சி- சென்னை இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவுக்குசென்னையில் இருந்து இதுவரையில் காலை ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தன. கோவாவில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான சேவைகள் இருந்து. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், நேற்றில் இருந்து மதியம் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கும், மாலை 6.55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கும் கூடுதலாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE