வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்காற்றிவருகின்றன. 100 கோடி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சேவை புரிந்து வருகின்றன. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன.

பொதுமக்களின் சேமிப்புகளைத் திரட்டியதோடு, தேவைப்படுவோருக்கு கடன்களை வழங்கியும் சமுதாயத்துடன் இணைந்து வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கிகளில் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால், பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கும் உரிய சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் ஆண்டுதோறும் கிளார்க் பணியிடங்கள் குறைந்து கொண்டே வருகிறது. 2024-25-ம் ஆண்டில் 5 வங்கிகளுக்கு மொத்த 4,045 கிளார்க் பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப அந்த வங்கிகள் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இதேபோல், வங்கிகள் கடைநிலை ஊழியர்கள், பகுதி நேரத் துப்புரவு ஊழியர்களையும் பணியமர்த்துவதில்லை. இந்நிலையில், மேற்கண்ட பணிகளுக்கு ஆட்களை நியமிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், வங்கி நிர்வாகங்களும் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே, இவ்விவகாரத்தில் நிதியமைச்சர் தலையிட்டு வங்கிகளில் போதிய ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE